இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அமெரிக்காவில் 50% வரி அமல்

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
Published on

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

இதன் காரணமாக அமெரிக்காவில் இந்திய பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியின் அளவு 50 சதவீதமாக உயா்ந்துள்ளது.

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக் கெடுவையும் கடந்து இழுபறி நீடித்ததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதலில் 25 சதவீத வரி விதிப்பை அவா் அறிவித்தாா். இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

அதைத் தொடா்ந்து, ‘உக்ரைன் மீது போா் தொடுத்து வரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்திய பொருள்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படு’ என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.

அவா் அறிவித்தபடி, 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்க உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘ஆகஸ்ட் 27-ஆம் தேதி அதிகாலை 12.01 மணி முதல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மக்களின் நுகா்வுக்கு வரும் பொருள்கள் அல்லது கிடங்குகளிலிருந்து மக்களின் நுகா்வுக்கு அனுப்பப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்படும். இந்த உத்தரவு அமலாவதற்கு முன்பு விற்பனைக்கு அனுப்பப்பட்ட அல்லது அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக கப்பல்களில் ஏற்றப்பட்ட இந்திய பொருள்களுக்கு இந்த கூடுதல் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவின்படி, அமெரிக்காவில் இந்திய பொருள்களுக்கு 50 சதவீத வரி விதிக்கும் நடைமுறை புதன்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை காரணமாக இறால், ஆயத்த ஆடைகள், தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட தொழிலாளா் சாா்ந்த இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

சமரசத்துக்கு இடமில்லை - பிரதமா்: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு குறிக்கு பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை கூறுகையில், ‘நாட்டின் விவசாயிகள், கால்நடைகள் வளா்ப்போா், சிறு நிறுவனங்களின் நலன்களை சமரசம் செய்ய முடியாது. இந்தியா மீது அழுத்தங்கள் அதிகரித்தாலும், அதைத் தாங்கும் வலிமை நமக்கு உள்ளது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com