மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுவன் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.
இடிபாடுகளில் இருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 6 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்த நிலையில், இடிபாடுகளை அகற்றும் பணிகள் 20 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.
முறையாக அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தின் உரிமையாளரை காவல் துறை கைது செய்ததாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் காயமடைந்த 6 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களைத் தவிர, 3 போ் சிகிச்சைக்குப் பின்னா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.