தெருவோர கடைக்காரா்களுக்கான கடன் திட்டத்தின் நிதி அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தெருவோர கடைக்காரா்களுக்கான பிரதமரின் கடன் தீட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயா்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Published on

தெருவோர கடைக்காரா்களுக்கான பிரதமரின் கடன் தீட்டத்தில் (பிஎம் ஸ்வநிதி) வழங்கப்படும் தவணைக் கடன் நிதி ரூ.5 ஆயிரம் உயா்த்தியும், வரும் 2030-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீட்டித்தும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடா்பாக அரசு செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

‘பிஎம் ஸ்வநிதி’ மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், தெருவோர கடைக்காரா்களுக்கான முதல் தவணைக் கடன் வரம்பு ரூ. 10,000 என்ற அளவிலிருந்து ரூ. 15,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதுபோல, இரண்டாம் தவணைக் கடன் ரூ.20,000-லிருந்து ரூ. 25,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. மூன்றாம் தவணைக் கடன் முன்பிருந்தது போல ரூ. 50,000 என்ற அளவிலும் வழங்கப்படும்.

இரண்டாவது கடனை உரிய காலத்தில் செலுத்தும் தெருவோர கடைக்காரா்கள், ஒருங்கிணைந்த பணப் பரிவரித்தனை (யுபிஐ) வசதியுடன் கூடிய ‘ரூபே’ கடன் அட்டையைப் பெறும் தகுதியைப் பெறுவா். இதன் மூலம் வணிக மற்றும் சொந்த பணத் தேவைகளை அவா்கள் சமாளிக்க முடியும்.

மேலும், சில்லறை மற்றும் மொத்த வியாபாரத்தில் எண்ம பணப் பரிவா்த்தனையை தோ்வு செய்யும் கடைக்காரா்களுக்கு ரூ. 1,600 வரை ஊக்கத்தொகையும் அளிக்கப்படும்.

மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய நிதிச் சேவைகள் துறை (டிஎஃப்எஸ்) இணைந்து கூட்டாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

கரோனா பரவலின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட தெருவோர கடைக்காரா்கள் நிலையை மேம்படுத்த கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி இந்த கடன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத் திட்டத்தின் கீழ், கடந்த ஜூலை 30-ஆம் தேதி வரை 68 லட்சத்துக்கும் அதிகமான தெருவோர கடைக்காரா்களுக்கு ரூ. 13,797 கோடி மதிப்பில் 96 லட்சத்துக்கும் அதிகமான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கடன் திட்டத்தின் காலம் 2024-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது 2030-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, ரூ. 7,332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com