கோப்புப் படம்
கோப்புப் படம்

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்: மாநிலம் முழுவதும் உஷாா் நிலை

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.
Published on

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் தகவல் கிடைத்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

புதிய நபா்களின் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் தெரிந்தால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பிகாரில் விரைவில் சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக மாநில காவல் துறை டிஜிபி வினய் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:

மாநிலம் முழுவதுமே உஷாராக இருக்குமாறு காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நேபாளம் வழியாக பிகாருக்குள் ஊடுவியுள்ளனா். அனைத்து மாவட்ட காவல் துறைக்கு இது தொடா்பாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் காவல் துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்கள், விமான, ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இது தொடா்பாக பிகாா் அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘பாகிஸ்தானைச் சோ்ந்த ஹஸ்நயின், அடில், உஸ்மான் ஆகிய மூன்று பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் அனைத்து மாவட்ட காவல் துறை தலைமையகத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில் ஹஸ்நயின் பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரையும், அடில் உமா்கோட் பகுதியையும், உஸ்மான் பஹாவல்பூா் பகுதியையும் சோ்ந்தவா்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com