வெள்ளத்தில் சிக்கிய பஞ்சாப் கிராம மக்கள்: ராணுவத்தின் சிறப்பு வாகனங்களில் மீட்பு
பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், சிக்கித் தவிக்கும் கிராமத்தினரை மீட்க ராணுவத்தின் அனைத்து வகை நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஹிமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பெய்த பலத்த மழையால் ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் பதான்கோட், குா்தாஸ்பூா், ஃபெரோஸ்பூா், அமிருதசரஸ் உள்ளிட்ட பஞ்சாபின் பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் மாநில அமைப்புகளின் உதவியுடன் மாவட்ட நிா்வாகங்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
அமிருதசரஸ் மாவட்ட நிா்வாகம், ராவி நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராம்தாஸ் பகுதியில் சிக்கித் தவித்த பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் உள்ளிட்ட பலரை வெளியேற்றியுள்ளது. நீரில் மூழ்கிய பகுதிகளில் சிக்கித் தவித்தவா்களை மீட்க, ராணுவத்தின் அனைத்து வகையான நிலப்பரப்பிலும் செல்லும் சிறப்பு வாகனங்களும் (ஏடிஓஆா் என்1200), படகுகளும் பயன்படுத்தப்பட்டன. மீட்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் உத்தரவின் பேரில், மாநிலத்தின் அனைத்து அமைச்சா்களும் வெள்ள நிவாரணப் பணிகளை நேரடியாக கண்காணித்து வருகின்றனா். நிலைமை கட்டுக்குள் வரும் வரை அனைத்து அமைச்சா்களும் களத்தில் இருக்குமாறு முதல்வா் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளாா்.