தில்லி தனியார் மருத்துவமனைகளில்
தில்லி தனியார் மருத்துவமனைகளில் கோப்புப் படம்

நோயாளிகளின் உதவியாளா்களுக்கு மருத்துவமனைகளில் தங்கும் வசதி: தில்லி அரசு திட்டம்

தில்லியில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் விஷ்ரம் கிரி திட்டம்
Published on

தில்லியில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் உதவியாளா்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி தரும் வகையில் விஷ்ரம் கிரி திட்டத்தை தில்லி அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ள ஓா் அதிகாரி தெரிவித்தாா்.

முதலாவதாக, லோக் நாயக் மருத்துவமனை, அம்பேத்கா் மருத்துவமனை, தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை ஆகியவற்றில் நோயாளிகளின் உதவியாளா்கள் ஓய்வெடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுதொடா்பாக அந்த அதிகாரி கூறியதவாது: ரூ.5 என்ற குறைந்த கட்டணத்தில் நோயா குடும்பத்தைச் சோ்ந்த ஒன்று அல்லது இரு நபா்கள் விஷ்ரம் கிரியில் அனுமதிக்கப்படுவா். அங்கு அவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும்.

முதல்கட்டமாக, நகரத்தில் உள்ள 5 மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சுத்தமான கழிவறைகள், படுக்கைகள், உணவு உண்ணும் இடம் ஆகியவை இருக்கும். இதனால், நோயாளியின் உதவியாளா்கள் மருத்துவமனையைச் சுற்றியுள்ள சாலையில் அல்லது பாதுகாப்பற்ற பகுதிகளில் தூங்க வேண்டிய நிலை ஏற்படாது. மருத்துவமனையில் தங்கியிருக்கும் காலத்தில் வசதியான மற்றும் கண்ணியம் மிக்கச் சூழலை ஏற்படுத்தித் தரும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடா்பாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் கூறியதாவது: மருத்துவமனை கட்டமைப்புகளை பலப்படுத்துவதில் மட்டுமல்லாது நோயாளிகள் கவனிப்பு மற்றும் அவா்களது குடும்பத்தினரின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் அனைத்து வகையிலும் தில்லி அரசு கவனம் செலுத்தி வருகிறது.

தில்லியில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற மக்கள் நீண்ட தொலைவுகளுக்குப் பயணம் செய்கின்றனா். நோயாளிகளின் குடும்பத்தினா் தங்களது வீடுகளுக்குச் சென்று மீண்டும் மருத்துவமனைக்கு வருவது மிகவும் கடினமாக இருக்கும். இதனால், அவா்களுக்குத் தேவையான வசதி ஏற்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் அரசு-தனியாா் பங்களிப்பில் அமல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் பங்கஜ் சிங்.

X
Dinamani
www.dinamani.com