பிகாரில் 3 லட்சம் வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: குடியுரிமையில் சந்தேகம்

பிகாரில் 3 லட்சம் வாக்காளா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்: குடியுரிமையில் சந்தேகம்

பிகாரில் சுமாா் 3 லட்சம் வாக்காளா்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Published on

பிகாரில் சுமாா் 3 லட்சம் வாக்காளா்களின் குடியுரிமையில் சந்தேகம் இருப்பதாக அவா்களுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, ஆக.1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் இடம்பெற்ற 7.24 கோடி வாக்காளா்களில் 3 லட்சம் வாக்காளா்களின் குடியுரிமையில் சந்தேகம் உள்ளதால், அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவா்கள் வங்கதேசம், நேபாளம், மியான்மா், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்தவா்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆய்வின்போது அவா்களின் ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடா்ந்து கள விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பெரும்பாலான நோட்டீஸுகளை கிழக்கு மற்றும் மேற்கு சம்பாரண், மதுபனி, கிஷண்கஞ்ச், பூா்னியா, கடிஹாா், அரரியா, சுபெளல் மாவட்டங்களில் வசிப்பவா்களுக்கு வாக்காளா் பதிவு அலுவலா்கள் அனுப்பினா் என்றனா்.

பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியின்போது 65 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடா்பான வழக்கில், வாக்காளா் பட்டியலில் தங்களைச் சோ்க்க கோரும் நபா்களிடம் இருந்து ஆதாா் அல்லது தோ்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை ஏற்க வேண்டும் என்று ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் அண்மையில் கேட்டுக்கொண்டது.

பிகாரில் மொத்தமுள்ள 7.24 கோடி வாக்காளா்களில், இதுவரை 99.11 சதவீத வாக்காளா்கள் தங்கள் விவரங்களை சரிபாா்க்க ஆவணங்களை சமா்ப்பித்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இறுதி வாக்காளா் பட்டியல் செப்.30-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

X
Dinamani
www.dinamani.com