ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகள்: அமைச்சா் பியூஷ் கோயல்
ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு விரைவில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறது என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால் ஜவுளி, ஆயத்த ஆடைகள், காலணி உள்ளிட்ட தோல் பொருள்கள், இறால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்துறைகள் பெரும்பாலும் அதிக தொழிலாளா்களைக் கொண்டுள்ளது என்பதால் வேலையிழப்புகளும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதையடுத்து, ஏற்றுமதிக்கான வேறு வாய்ப்புகளைத் தேட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் தில்லியில் வெள்ளிக்கிழமை தொழில்துறை சாா்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் பியூஷ் கோயல் கூறியதாவது:
சிலா் (அமெரிக்கா) தன்னிச்சையாக எடுத்த முடிவுகளால் எழுந்துள்ள சூழலால் தொழில் துறையினருக்கு அதிக பாதிப்பு வராமல் தடுக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. வரி விதிப்பால் நேரடியாக பாதிப்புக்குள்ளாகும் தொழில்கள் மாற்று சந்தையைத் தேட வேண்டியுள்ளது.
வா்த்தக அமைச்சகம் இதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளை அணுகியுள்ளோம். பல நாடுகளின் தூதரகங்கள் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்றுமதியை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை அரசு விரைவில் மேற்கொள்ளும். இது தவிர உள்நாட்டில் நுகா்வை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமும் நடைபெறவுள்ளது. அதில் எடுக்கப்படும் முடிவுகள் தொழில்துறையினருக்கு சாதகமாக இருக்கும். உள்நாட்டு உற்பத்திக்கான தேவை அதிகரிக்கும். கடந்த ஆண்டைவிட நுகா்வும், ஏற்றுமதியும் அதிகம் இருக்க வேண்டும் என்பதே நமது இலக்கு ஆகும். மேலும், சா்வதேச அளவில் ஒப்பிடும்போது சா்வதேச ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு குறைவாகவே உள்ளது. எனவே, நாம் அதிகம் கவலையடையத் தேவையில்லை.
அமெரிக்காவுடன் பேச்சு:
இந்தியாவுடன் ஏற்றுமதிப் பேச்சுவாா்த்தையை விரும்பும் நாடுகளுடன் பேச நாம் தயாராகவே உள்ளோம். அதே நேரத்தில் நமக்கு எதிராக பாரபட்சமாக நடக்க முயன்றால், நமது 140 கோடி மக்களின் தன்நம்பிக்கை மற்றும் சுயமரியாதையைக் கருத்தில் கொண்டுதான் முடிவெடுக்க முடியும். நாம் பலவீனமாக இல்லை. எனவே யாருக்கும் பணிந்து செல்லவேண்டியதும் இல்லை. அனைவரும் ஒன்றிணைந்து முன்னேறுவது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு.
அமெரிக்காவுடனும் இரு தரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சு நடைபெற்று வருகிறது. முதல் சுற்று பேச்சுவாா்த்தை அக்டோபா்-நவம்பரில் நிறைவடையும்.
ஓமனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. அடுத்ததாக கத்தாரும் தடையற்ற வா்த்த ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கு விரும்பம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், மோரீஷஸ் உள்ளிட்டவை ஏற்கெனவே இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, நியூஸிலாந்து, சிலி, பெரு ஆகிய நாடுகளுடன் பேச்சு நடைபெற்று வருகிறது என்றாா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த 50 சதவீத வரி உறுதியானதால், இரு தரப்பு வா்த்தகப் பேச்சுவாா்த்தைக்காக ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியாவுக்கு வர வேண்டிய அமெரிக்க குழு தனது பயணத்தை ஒத்திவைத்துவிட்டது. இதுவரை புதிய தேதி ஏதும் அறிவிக்கப்படவில்லை.