
கர்நாடகத்தில் பானிபூரி விற்பனையாளரின் வரதட்சணை கொடுமையால் 27 வயது கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சுத்தகுண்டேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷில்பா(27). இருவரும் ஐடி துறையில் பணியாற்றி வந்தனர். திருமணமான ஓராண்டில் பிரவீன் தனது ஐடி பணியை விட்டுவிட்டு பானிபூரி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பு ஷில்பாவும் ஐடி துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த தம்பதியருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், ஷில்பா மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்தின்போது ஷில்பா குடும்பத்தினர் வரதட்சணையாக ரூ.50 லட்சம், 150 கிராமம் தங்கநகை வரதட்சணை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும் பானிபூரி கடையை நடத்திவந்த பிரவீன் புதிதாகத் தொழில் தொடங்க பணம் தேவைப்படுவதாகக் கூறி ஷில்பாவை தொடர்ச்சியாகத் தொந்தரவு செய்துள்ளார்.
ஷில்பாவின் குடும்பத்தினர் தொழில் தொடங்க ரூ. 5 லட்சம் கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் பிரவீனின் பணத்தேவையால் ஷில்பா நாளுக்குநாள் துன்புறுத்தப்பட்டுள்ளார். இதனால் வெறுப்படைந்த ஷில்பா தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்திய பிரவீன் குடும்பத்தினர் மீண்டும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் தம்பதியரிடையே பிரச்னை தொடர்ந்து வந்தது.
விரக்தியின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற ஷில்பா மனம் உடைந்து, தற்கொலை செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து பிரவீனின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் ஷில்பாவின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கணவர் பிரவீன், அவரது தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.