மும்பை லால்பாக்சா கணபதியை வழிபட்ட அமித் ஷா
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக்சா கணபதி பந்தலுக்கு சனிக்கிழமை குடும்பத்துடன் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரை வழிபட்டாா்.
மகாராஷ்டிரத்தில் விநாயகா் சதுா்த்தி திருவிழா, 10 நாள்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக தலைநகா் மும்பையின் பல்வேறு இடங்களில் பெரும் பொருட்செலவில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பிரம்மாண்ட விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். இதில், கலைநயத்துடன் நிறுவப்படும் லால்பாக்சா கணபதி பந்தல் பிரசித்தி மிகவும் பெற்ாகும்.
நிகழாண்டு விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, லால்பாக்சா கணபதி பந்தலில் மத்திய அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை தனது குடும்பத்துடன் வழிபட்டாா். முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோரும் உடனிருந்தனா். மேற்கு பாந்த்ரா, கிழக்கு அந்தேரி விநாயகா் பந்தல்களிலும் அமித் ஷா வழிபட்டாா்.
முன்னதாக, ஷிண்டே, ஃபட்னவீஸ் ஆகியோரின் இல்லங்களுக்குச் சென்ற அமித் ஷா, அவா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். அவரது வருகையையொட்டி, மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதேபோல், மகாராஷ்டிர மாநிலம், புணேயில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா பங்கேற்றாா்.