
பிகார் வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் நடந்திருப்பதாகக் கூறப்படும் ஏகப்பட்ட குளறுபடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல், ஒட்டுமொத்த கிராமத்தையும் ஒரு கற்பனை வீடாக மாற்றியிருக்கிறது தேர்தல் ஆணையம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிகார் மாநிலம் புத்த காயவில் நிடானி என்ற கிராமத்தில் வாழும் 947 பேரும், ஒரே வீட்டில் வாழ்பவர்களாக மாற்றி, மேஜிக் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம் என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார். வழக்கம் போல தேர்தல் ஆணையம் இந்த குற்றச்சாட்டுகளையும் மறுத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பிகார் மாநில அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில், 947 வாக்காளர்கள், வீட்டு எண் 6 என்ற முகவரியில் வாழ்கிறார்கள். இது உண்மையா? நிடானி கிராமத்தில் பல நூறு வீடுகளும் குடும்பங்களும் வாழ்கிறார்கள். ஆனால், வாக்காளர் பட்டியலில், ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒரு கற்பனையான வீட்டில் வாழ்வதாகக் காட்டியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்தின் மேஜிகைப் பாருங்கள். ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒரே வீட்டில் வாழ்வதாகக் குறிப்பிட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பதிவு அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று பட்டியலை ஆய்வு செய்திருப்பார்கள். ஆனாலும் வீட்டு முகவரியை கவனிக்கவில்லை. ஏனென்றால், அதனால் சிலருக்கு பயன் ஏற்படும் என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
அதாவது, இது ஏதோ ஒரு தவறு அல்ல, வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் நடக்கும் மோசடி. வீட்டு எண்ணை நீக்கிவிட்டால், போலி வாக்காளர்களை மறைத்துவிடலாம், போலி வாக்காளர்களை உருவாக்கலாம் அவர்களது அடையாளங்களை மாயமாக்கவிடலாம் என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
ஒரு சிறிய கிராமத்தில் வாழும் 947 பேரை ஒரே முகவரியில் பதிவிட்டிருக்கிறார்கள் எனற்ல், ஒட்டுமொத்த பிகாரிலும், ஒட்டுமொத்த நாட்டிலும் வாக்காளர் பட்டியலில் நடந்திருக்கும் குளறுபடிகளை கற்பனை செய்துபாருங்கள். ஜனநயாகம் திருடப்பட்டுவிட்டதாக ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதற்கு வாழும் உதாரணம்தான் நிடானி கிராமம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் விசாரித்தால், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு வீட்டு எண்கள் இல்லை, வெறும் கற்பனையான எண் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.