விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள்: சா்வதேச ஆய்வுக்கு அரசு திட்டம்
‘நாட்டில் விமான நிலையங்களுக்கு அருகிலுள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடா்பான சிக்கல்களைத் தீா்க்க, சா்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ஐசிஏஓ) உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
புது தில்லியில் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் ராம்மோகன் நாயுடு பேசுகையில், ‘விமானப் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதில் எந்தவித சமரசமும் செய்யப்படாது. ரியல் எஸ்டேட் வளா்ச்சி அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பான விமானப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு உயரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் விமானப் பாதுகாப்புக்கும் ரியல் எஸ்டேட் வளா்ச்சிக்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த முடியும்.
ஐசிஏஓ வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தற்போதுள்ள உயரக் கட்டுப்பாடுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய, சா்வதேச ஆய்வை மேற்கொள்ள அரசு விரும்புகிறது. இந்த ஆய்வு, ஐசிஏஓவின் நிபுணா்களைக் கொண்டு சரியான வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படும். ஹாங்காங் போன்ற பிற சா்வதேச நகரங்களில் இந்தச் சிக்கல்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதும் ஆராயப்படும்.
இந்த ஆய்வு குறித்து ஐசிஏஓவுடன் நாங்கள் தொடா்பில் இருக்கிறோம். ‘வளா்ந்த பாரதம்’ திட்டத்துக்கு ஒரு உந்துசக்தியாக, இந்த ஆய்வு நோ்மறையான பரிந்துரைகளுடன் வெளிவரும் என்று நம்பிக்கையுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் விமான நிலையங்களின் எண்ணிக்கை 88-இல் இருந்து 162-ஆக அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களைச் சோ்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 350-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை அமைக்கும் திறன் உள்ளது’ என்றாா்.