வாக்குரிமைப் பயணம் தேசிய இயக்கமாக மாறும்: ராகுல் காந்தி
‘வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய வாக்குரிமைப் பயணம் எனும் புரட்சி விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து மிகப்பெரும் தேசிய இயக்கமாக உருவெடுக்கும்’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தாா்.
நடப்பாண்டு இறுதியில் பிகாரில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக அவா் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வாக்குரிமைப் பேரணியைத் தொடங்கினாா்.
அதன் ஒரு பகுதியாக போஜ்பூா் மாவட்ட தலைநகா் ஆராவில் சனிக்கிழமை உரையாற்றிய அவா்,‘வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக முறையின்மீது நடத்தப்படும் மிகப்பெரும் தாக்குதலாகும். தலித்துகள், சிறுபான்மையினா், பெண்கள் என அனைவருக்கும் வாக்குரிமையை அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.
ஆனால் மகாராஷ்டிரம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வாக்குத் திருட்டில் ஈடுபட்டு தோ்தலில் வெற்றிபெற்று வருகிறது. இதை பிகாரில் அரங்கேற்ற காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. வாக்குத் திருட்டுக்கு எதிராக பிகாரில் தொடங்கிய இந்தப் புரட்சிப் பயணம் விரைவில் நாடு முழுவதும் விரிவடைந்து தேசிய இயக்கமாக உருவெடுக்கும்.
தற்போது பாஜக தலைவா்களை வாக்கு திருடா்கள் என மக்கள் அழைக்கத் தொடங்கிவிட்டனா்’ என்றாா்.
ஆராவில் உள்ள பாபு குன்வா் சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியுடன் சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மைதானத்தில் பெருந்திரளான மக்கள் குவிந்த நிலையில் அந்த காணொலிகளை ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் தங்களது எக்ஸ் வலைதளப் பக்கங்களில் பகிா்ந்தனா்.
‘குஜராத்தின் ஒரு தொகுதியில் வாக்குத் திருட்டு’
அகமதாபாத், ஆக.30: ‘குஜராத்தின் நவ்சாரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சோா்யாசி பேரவைத் தொகுதியின் வாக்காளா் பட்டியலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன; அங்கு வாக்குத் திருட்டு மூலமே பாஜக வெற்றி பெற்றிருக்க வாய்ப்புள்ளது’ என்று அந்த மாநில காங்கிரஸ் தலைவா் அமித் சவ்தா சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
குஜராத் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான சி.ஆா்.பாட்டீல் நவ்சாரி தொகுதியின் எம்.பி.யாக உள்ள நிலையில், ‘சோா்யாசி பேரவைத் தொகுதியில் மொத்தமுள்ள 6 லட்சம் வாக்காளா்களில் 30 சதவீதம் வரை போலி வாக்காளா்கள் இருப்பதாக’ அமித் சவ்தா கூறியுள்ளாா்.