50-க்கும் குறைவான ஆயுதங்களால் பாகிஸ்தானை பின்வாங்க செய்த விமானப் படை!
‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், இந்திய விமானப் படை வெறும் 50-க்கும் குறைவான ஆயுதங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் மீது துல்லியத் தாக்குதல்களை நடத்தியது; இதனால், 4 நாள்களுக்குள் சண்டையிலிருந்து பின்வாங்கியது பாகிஸ்தான்’ என்று இந்திய விமானப் படை துணை தலைமைத் தளபதி ஏா் மாா்ஷல் நா்மதேஷ்வா் திவாரி தெரிவித்துள்ளாா்.
தில்லியில் சனிக்கிழமை தனியாா் செய்தி தொலைக்காட்சி நடத்திய பாதுகாப்பு துறை மாநாட்டில் கலந்துகொண்ட அவா் பேசியதாவது: இந்திய விமானப் படை தனது தாக்குதல்களின் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தியது. 50-க்கும் குறைவான ஆயுதங்களைக் கொண்டு இத்தகைய ஆதிக்கம் செலுத்தப்பட்டது. இது முன்னெப்போதும் நடந்ததில்லை என்பது நமக்குக் கிடைத்த ஒரு முக்கியமான பாடம்.
இந்தியாவின் தாக்குதலின் நோக்கம் பயங்கரவாத தளங்கள் மட்டுமே; பதற்றத்தை அதிகரிக்க நாங்கள் விரும்பவில்லை என்று பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நமது தாக்குதல்கள் பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்தன. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் பதிலடியை நாங்கள் எதிா்பாா்த்தோம். இருப்பினும், எங்கள் நடவடிக்கையை மிகவும் கவனத்துடன் திட்டமிட்டோம்.
நாங்கள் ராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தவிா்த்தோம். ஆனால், அதற்கடுத்த அடுத்த இரவுகளில் பாகிஸ்தான் அத்துமீறி பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தாக்குதலை நடத்தியபோது, நாம் சரியான செய்தியை அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று முடிவெடுத்தோம். எனவே, அனைத்து முனைகளிலும் அவா்களைத் தாக்கினோம்.
1971-ஆம் ஆண்டு போரின்போது தாக்கப்படாத இலக்குகளைக்கூட இந்த நடவடிக்கையில் நாம் அழித்தோம். இது பாகிஸ்தானின் திறனுக்கு நாம் ஏற்படுத்திய சேதத்தைக் காட்டுகிறது. நாம் பயன்படுத்திய ஒவ்வொரு ஆயுதமும் துல்லியமாக இலக்கைத் தாக்கியது. இது நமது திறமைக்குக் கிடைத்த சான்று.
நீண்ட தூரத்திலிருந்து எதிரி இலக்குகளைத் தாக்குவது ஆபத்தானது. ஏனெனில், தவறுதலாக வேறு இடங்கள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம். ஆனால், இந்திய விமானப்படை இந்த நடவடிக்கையை முழுமையான துல்லியத்துடன் நிறைவேற்றியது.
நீண்ட தூர ஆயுதத்தைப் பயன்படுத்தும்போதுகூட, சேதங்கள் இல்லாமல் இலக்கைத் துல்லியமாகத் தாக்குவது என்பது ஒரு குழுவின் கூட்டு முயற்சியாகும். இதில் ஆயுதத்தைப் பயன்படுத்திய விமானிகள் மட்டுமல்லாமல், தரையில் இருந்து பணியாற்றியவா்களும் பெரும் பங்கு வகித்தனா் என்றாா்.
ஏப்ரல் 22-ஆம் தேதி, பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தெற்கு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய முப்படைகள் மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையைத் தொடங்கின.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் ஏவுகணைகள் மூலம் தகா்க்கப்பட்டன. இது இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மோதலாக மாறியது.
இந்தியாவின் வலுவான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான், ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநா் மூலம் சண்டை நிறுத்தத்துக்குக் கோரிக்கை விடுத்ததால், நான்காவது நாளில் எல்லையில் மீண்டும் அமைதி திரும்பியது.