
பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மேற்கொள்ளபட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தப் பணிக்குப் பின், வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் ஏராளமானோர் இருப்பதாக வெளியான தகவலுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் பிகாரில் சுமார் 15 தொகுதிகளில் 67,826 போலி வாக்காளர்கள் இருப்பதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்து, இன்று(ஆக. 31) பிகார் மாநில தலைமை தேர்தல் அலுவலர் தரப்பிலிருந்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘சிறப்பு தீவிர சீர்திருத்தம்(எஸ்.ஐ.ஆர்.) என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர்கள் பதிவு முறைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இப்போது எஸ்.ஐ.ஆர்.-இன் கீழ் வெளியிடப்பட்டுள்ள நடப்பு வரைவு வாக்காளர் பட்டியல் இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. பொது மக்கள் விவர சரிபார்ப்புக்காகவே அவை வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேதெனும் ஆட்சேபணை இருப்பின் வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இதர தரப்பினர் தெரிவிக்கலாம்.
மேற்கண்ட வாக்காளர் வரைவு பட்டியலில் 67,826 போலி வாக்காளர்கள் இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் தகவலானது, தரவு திரட்டுதல் மூலம் பெறப்பட்டுள்ளவை. அவையனைத்தும் கள விவர சரிபார்ப்புப் பணி, ஆவண சரிபார்ப்பு ஆகியவை மூலம் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ள தகவல் அல்ல. ஆகவே, மேற்கண்ட எண்ணிக்கையிலான போலியான வாக்காளர்கள் இருப்பதாக ஒரு முடிவுக்கு வர முடியாது.
பிகாரில், அதிலும் குறிப்பாக, ஊரகப் பகுதி தொகுதிகளில், ஒரே பெயரில் பல தனி நபர்கள் இருக்கலாம். அவர்களுடைய பெற்றோர் பெயர்களும் ஒரே போல இருக்கலாம், வயதும் அப்படியே.
உச்ச நீதிமன்றத்தில் போலி வாக்காளர்கள் விவகாரம் தொடர்பான முந்தைய வழக்கு விசாரணைகளில், மேற்கண்ட தகவல்களின் அடிப்படியில் ஒருவரை போலியான வாக்காளராக எடுத்துக்கொள்ள முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு கள விவர சரிபார்ப்பு அவசியம். தேவைப்பட்டால், தேர்தல் அலுவலரிடம் முறையிட்டு தவறு இருப்பின் திருத்திக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த முறையையே இப்போதும் கடைப்பிடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.