
இந்தியா - சீனா இடையே நிலையான உறவால் இருநாட்டு 280 கோடி மக்களுக்கும் பயன் கிட்டும் என்று வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ள நிலையில், அதனிடையே சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இது குறித்து, இன்று (ஆக. 31) செய்தியாளர்களுடன் பேசிய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, “இரு நாடுகளும் தங்கள் உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கியமாக கவனம் செலுத்துவதை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இவ்விவகாரத்தில், இந்தியாவும் சீனாவும் உறவு பேணுபவர்களே தவிர்த்து எதிரிகள் அல்ல என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இரு தலைவர்களுக்குமிடையில் ஒருமித்த உணர்வாக, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒரு நிலையான நல்லெண்ண உறவு நீடித்தால் அதன்மூலம், இருநாட்டிலுள்ள 280 கோடி மக்களுக்கும் பயனளிப்பதாக அமையும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இருநாட்டு பொதுநலன் சார்ந்து இருதரப்பு வேற்றுமைகளைக் களைந்து செயல்படுவதுடன், இரு தலைவர்களும் ஒருமித்த கருத்தாக, வேற்றுமையானது சண்டையாக மாறக்கூடாது என்றும் அதற்கு அனுமதிக்கக்கூடாது என்பதையும் ஏற்றுக்கொண்டனர்.
ஆசிய சகாப்தம் இருக்க வேண்டுமானால், அதேபோல, பல்நோக்கு ஆசியம் என்ற மையக் கருத்துடன் பல்நோக்கு உலகம் ஒன்று செயல்பட வேண்டுமானால், அதற்கு இந்தியாவும் சீனாவும் வளர்ச்சியடைவதும், ஒத்துழைப்பு நல்குவதும் வேண்டும் என்பதும், புரிந்துகொள்ளப்பட்டது. எல்லையில் அமைதி நிலவுவதே இருதரப்பு உறவுக்குமான காப்பீடு போன்றது. இந்தியா - சீன உறவு மேம்பட சீன அதிபர் தரப்பிலிருந்து 4 கருத்துகளும் முன்வைக்கப்பட்டுள்ளன” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.