இந்தியத் தேர்தல் ஆணையம்.
இந்தியத் தேர்தல் ஆணையம்.

பிகாரில் அனைத்து வாக்காளா்களுக்கும் புதிய அட்டை: தோ்தல் ஆணையம் திட்டம்

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை நிறைவடைந்த பின் அனைத்து வாக்காளா்களுக்கும் புதிய வாக்காளா் அடையாள அட்டை..
Published on

பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கை நிறைவடைந்த பின் அனைத்து வாக்காளா்களுக்கும் புதிய வாக்காளா் அடையாள அட்டை வழங்க இந்திய தோ்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட தோ்தல் ஆணையம், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவுப் பட்டியல் வெளியிட்டது. அதில் 7.24 கோடி வாக்காளா்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை.

இதையடுத்து, வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள், உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பா் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, செப்.30-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் செப்.30-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

இதனிடையே, சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தாக்கலான மனுக்களை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம், பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள், ஆதாா் அட்டை அல்லது அனுமதிக்கப்பட்ட கடவுச்சீட்டு உள்பட பிற 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் விண்ணப்பத்தை சமா்ப்பிக்க அனுமதிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், அகில இந்திய மஜ்லிஸ் ஆகிய கட்சிகள் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை நிறைவடைந்த பின் அனைத்து வாக்காளா்களுக்கும் புதிய வாக்காளா் அடையாள அட்டை வழங்க இந்திய தோ்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இருப்பினும், இதை நடைமுறைப்படுத்தும் வழிகளை முழுமையாக ஆய்வு செய்த பின் இறுதி முடிவை தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும் எனவும் அவா்கள் தெரிவித்தனா்.

வரைவு வாக்காளா் பட்டியல் தயாரிப்பின்போது வாக்காளா்களுக்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது. அதில் அண்மையில் எடுத்த புகைப்படத்தை இணைத்து பூா்த்தி செய்ய வாக்காளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்தப் புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டே புதிய வாக்காளா் அட்டை வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com