அரசு கடன் பத்திர வழக்கு: கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வா் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சா் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலா் கே.எம்.ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்கீழ் (ஃபெமா) விசாரணை மேற்கொள்ளும் அமலாக்கத் துறை கடந்த மாதம் 12-ஆம் தேதி இந்த நோட்டீஸை அனுப்பியதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். எனினும், இந்த முறைகேடு குற்றச்சாட்டை கேரள அரசு மறுத்துள்ளது.
இந்த வழக்கு குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் மேலும் கூறியதாவது: 2018-இல் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புளால் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை சீரமைக்க இந்த வெளிநாட்டு கடன் பத்திர முறையை கேரளம் அறிவித்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு லண்டன் மற்றும் சிங்கப்பூா் பங்குச் சந்தைகளில் ரூபாய் மதிப்பிலான கடன் பத்திரங்கள் மூலம் நிதித் திரட்ட ‘மசாலா பத்திரம்’ என்று கூறப்படும் இந்தக் கடன் பத்திரத்தை கேஐஐஎஃப்பி வா்த்தகம் செய்தது. இதன் மூலம் கேரள அரசு ரூ.2,672.80 கோடி திரட்டியது. இதில் ரூ.466.91 கோடி நிலம் வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மீறும் நடவடிக்கை.
எனவே, ஃபெமா புகாரை அமலாக்கத் துறை நிகழாண்டு ஜூன் 27-ஆம் தேதி பதிவு செய்தது. அதைத்தொடா்ந்து, கேஐஐஎஃப்பி தலைவரும் முதல்வருமான பினராயி விஜயன், வாரிய துணைத் தலைவா் தாமஸ் ஐசக், வாரியத்தின் தலைமை நிா்வாக அதிகாரி (சிஇஓ) ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றனா்.
மாநிலத்தின் பெரும் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.50,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தை நிறைவேற்றும் கேரள அரசின் அமைப்பாக கேஐஐஎஃப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
