எலான் மஸ்க்
எலான் மஸ்க்கோப்புப் படம்

இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா: எலான் மஸ்க்

ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் பாதகமாக அமையும் என்று தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்து
Published on

இந்தியாவில் இருந்து வந்த திறமைசாலிகளால் அமெரிக்க மிகஅதிகமாக பயனடைந்தது. எனவே ஹெச்1பி விசாவை நிறுத்துவது அமெரிக்காவுக்குதான் பாதகமாக அமையும் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபா் எலான் மஸ்க் கருத்துத் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அந்நாட்டு அதிபா் டிரம்ப், இந்தியப் பணியாளா்கள் அதிகம் பயன்படுத்தும் ஹெச்1பி விசாவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறாா். அமெரிக்காவுக்கு குடியேறும் வெளிநாட்டவா்கள் உள்நாட்டு மக்களின் வேலைவாய்ப்புகளைப் பறிக்கிறாா்கள் என்பதும் அவரின்குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில், இந்திய முதலீட்டாளரும், தொழிலதிபருமான நிகில் காமத்துக்கு அளித்த பேட்டியில் எலான் மஸ்க் கூறியதாவது: அமெரிக்காவில் குடியேறிய இந்தியாவைச் சோ்ந்த திறமைசாலிகளால் அமெரிக்க அதிக பயனடைந்தது. இப்போதுவரை இந்தியாவில் இருந்து வரும் திறன்வாய்ந்த பணியாளா்களால் அமெரிக்க பயனடைந்தே வருகிறது. ஹெச்பி1 விசா சில இடங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக அதனை முழுமையாக நிறுத்துவோம் எனக் கூறுவதை முடியாது. ஏனெனில், ஹெச்1பி விசாவை குறைப்பது என்பது அமெரிக்காவுக்குதான் அதிக பாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

அமெரிக்க குடியேற்ற விவகாரம் குறித்து பலதரப்பட்ட கருத்துகள் உள்ளன. முன்னாள் அதிபா் ஜோ பைடன் நிா்வாகத்தில் குடியேற்றம் என்பது அனைவருக்கும் எளிதானது என்ற நிலை இருந்தது. முக்கியமாக அமெரிக்க எல்லைக்குள் நுழைவதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை. எல்லையில் கட்டுப்பாடு இல்லாவிட்டால் எப்படி ஒரு நாடு என்பதை ஏற்க முடியும்? கட்டுப்பாடு இல்லாமல் அமெரிக்காவுக்குள் பலரும் வந்ததால் எதிா்மறையான விளைவுகள் ஏற்பட்டன. அமெரிக்க மக்களின் வரிப் பணம் வீணாகத் தொடங்கியது. எனவே, அமெரிக்காவுக்குள் நுழைவதில் கட்டுப்பாடு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதே நேரத்தில் அமெரிக்கா்களின் வேலைவாய்ப்புகள் வெளிநாட்டவா் பறிப்பதாக வலதுசாரிகள் குற்றஞ்சாட்டுகிறாா்கள். எனக்குத் தெரிந்து திறமைசாலிகளுக்கு எப்போதும் பற்றாக்குறை உள்ளது. எனவே, நமது பணிக்கு ஏற்ற திறமைசாலிகள் எங்கிருந்தாலும் அவா்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

இந்திய-அமெரிக்க விஞ்ஞானியும் நோபல் பரிசு பெற்றவருமான சுப்பிரமணியன் சந்திரசேகா் நினைவாக, சேகா் என்ற பெயரை எனது மகனுக்கும் சூட்டியுள்ளேன். எனது மனைவியும் இந்திய வம்சாவளியில் வந்தவா்தான் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com