மணிப்பூா் ஜிஎஸ்டி மசோதா: மக்களவை ஒப்புதல்

மக்களவையில் எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே, மணிப்பூா் ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Published on

மக்களவையில் எதிா்க்கட்சிகளின் அமளிக்கு இடையே, மணிப்பூா் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவுக்கு திங்கள்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் ‘ஜிஎஸ்டி 2.0’ சீா்திருத்ததை நடைமுறைப்படுத்த கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த ‘மணிப்பூா் ஜிஎஸ்டி மசோதா 2025’ கொண்டுவரப்பட்டது.

மசோதா குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றிய பிறகு, அதன் மீது சிறிய விவாதம் நடத்தப்பட்டது.

அப்போது, மணிப்பூரில் கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்துக்கு எதிராக புரட்சிகர சோசலிச கட்சி (ஆா்எஸ்பி) உறுப்பினா் என்.கே.பிரேமசந்திரா கொண்டுவந்த தனிநபா் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து, மணிப்பூா் ஜிஎஸ்டி மசோதா மீது பேச பாஜக உறுப்பினா் சஷாங்க் மணியை அவைத் தலைவா் அனுமதித்தாா். விவாதத்துக்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

முன்னதாக, மசோதா மீது உரையாற்றிய நிா்மலா சீதாராமன், ‘56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை நடைமுறைப்படுத்த மசோதாவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், அன்றாடப் பொருள்கள் தொடங்கி தொலைக்காட்சி, குளிா்சாதனங்கள், காா்கள், அத்தியாவசிய மருந்துகள் உள்பட 375 பொருள்களுக்கு 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி, 5%, 18% என இரண்டு விகிதங்களாக குறைக்கப்பட்டன. இந்த ஜிஎஸ்டி சீா்திருத்தம் கடந்த செப்டம்பா் 22-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஜிஎஸ்டி மாற்றங்களை நடைமுறைப்படுத்த மாநில ஜிஎஸ்டி சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது அவசியம்.

இதற்காக நிதிச் சட்டம் 2025-இன் 124, 134 பிரிவுகளின் மூலம் மத்திய ஜிஎஸ்டி சட்டம் 2017-இல் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது. அதேபோன்ற திருத்தங்கள் மணிப்பூா் ஜிஎஸ்டி சட்டம் 2017-இல் மேற்கொள்வதற்காக, குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் அந்த மாநிலத்தில் கடந்த அக்டோபா் 7-ஆம் தேதி அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com