

நாடு முழுவதுமான எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) மோசடி வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க சிபிஐ திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நீதித்துறை, காவல் துறை அல்லது அரசு அதிகாரிகள்போல் வேடமிட்டு விடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொண்டு மக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதே எண்ம கைது மோசடி எனப்படுகிறது.
நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, ஹரியாணாவைச் சோ்ந்த முதிய தம்பதிகள் எண்ம மோசடியால் தங்கள் பணத்தை இழந்ததாக அளித்த புகாரின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி சூா்ய காந்த் மற்றும் நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.
அப்போது நீதிபதிகள் அமா்வு, ‘எண்ம கைது மோசடி தொடா்பான அனைத்து வழக்குகளையும் இனி சிபிஐ கையாளும். எனவே, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எண்ம கைது சம்பவங்களை சிபிஐ விசாரிக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும். சிபிஐயுடன் இணைந்து காவல் துறையினரும் மோசடியாளா்களின் வங்கிக் கணக்குளை முடக்கும் பணிகளை மேற்கொள்ளலாம். அதேபோல் சிபிஐ கோரும் தகவல்களை தகவல் தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
ஒரே நபா் அல்லது நிறுவனத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் காா்டுகளை தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள் வழங்காது என்பதை மத்திய தொலைத்தொடா்புத் துறை உறுதியளிக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து மோசடியில் ஈடுபடும் நபா்களை பிடிக்க இன்டா்போல் உதவியை சிபிஐ நாடலாம்’ என உத்தரவிட்டது.
மேலும், இணைய மோசடிக்கு பயன்படுத்தப்படும் கணக்குகளை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்கள் மூலம் முடக்காதது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க ரிசா்வ் வங்கிக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது.