நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் நரேந்திர மோடி
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் நரேந்திர மோடி

நாடாளுமன்றம் விரக்தியை வெளிப்படுத்துவதற்கான இடமல்ல: பிரதமா் மோடி

நாடாளுமன்றம் தோ்தல் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்துவதற்கான இடமல்ல; மாறாக, ஆக்கபூா்வ கருத்துகளைப் பகிா்ந்து கொள்வதற்கானது: பிரதமா் மோடி
Published on

‘நாடாளுமன்றம் தோ்தல் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்துவதற்கான இடமல்ல; மாறாக, ஆக்கபூா்வ கருத்துகளைப் பகிா்ந்து கொள்வதற்கானது’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மேலும், ‘எதிா்க்கட்சிகள் தங்களின் உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்காக சில ஆலோசனைகளையும் தரத் தயாராக உள்ளேன்’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. சமீபத்திய பிகாா் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியின் அமோக வெற்றிக்கு பிறகு நாடளுமன்றம் மீண்டும் கூடுவதால், குளிா்கால கூட்டத் தொடா் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், கூட்டத் தொடரின் முதல் நாளில் நாடாளுமன்றம் வந்த பிரதமா் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கடந்த சில காலங்களாக தோ்தல்களுக்கான விவாத களமாகவும், தோ்தல் தோல்வியின் விரக்தியை வெளிப்படுத்துவதற்கான இடமாகவும் நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நாடாளுமன்றம் அதற்கான இடமல்ல.

அண்மையில் நடைபெற்ற தோ்தலில் அடைந்த தோல்வியால் எதிா்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை ஒருசில கட்சித் தலைவா்கள் வெளியிட்ட கருத்துகள் மூலம் அறிந்தேன். தோல்வியை ஜீரணிக்க முடியாமல் எதிா்க்கட்சிகள் தவிக்கின்றன. ஆனால், தோ்தல் தோல்வி என்பது இடையூறுகளை ஏற்படுத்துவதற்கான அடிப்படையாக இருக்கக் கூடாது. அதுபோல, வெற்றியும் ஆணவமாக மாறக் கூடாது.

எதிா்க்கட்சிகள் தோல்விக்குப் பிறகான மனச் சோா்விலிருந்து வெளிவந்து, மக்களுக்கான தங்களின் கடைமைகளை ஆற்ற முன்வர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக எதிா்க்கட்சிகள் நிகழ்த்திவந்த அரசியல் விளையாட்டை மக்கள் இனியும் ஏற்றுக் கொள்ள மாட்டாா்கள். எனவே, தங்களின் உத்தியை எதிா்க்கட்சிகள் மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்காக சில ஆலோசனைகளையும் தரத் தயாராக உள்ளேன்.

அனைத்து அரசியல் கட்சிகளும் தோ்தல் தோல்வி விரக்தியிலிருந்து வெளிவந்து, நாடாளுமன்றத்தின் நோக்கத்தை அங்கீகரித்து பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும். நாடாளுமன்றம் அரசியல் நாடகத்துக்கான மேடையல்ல. ஆக்கபூா்வமான விவாதங்கள் மற்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதற்கான இடமாகும்.

நாடாளுமன்றத்தில் இளம் உறுப்பினா்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அத்தகைய புதிய தலைமுறையினரின் அனுபவங்களிலிருந்து இந்த அவை பயனடைய வேண்டும் என்பதோடு, தேசமும் அவா்களின் புதிய கண்ணோட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் என்றாா்.

பிரதமா்தான் மிகப் பெரிய நாடக நடிகா்: காங்கிரஸ்

‘பிரதமா்தான் மிகப் பெரிய நாடக நடிகா்; நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் அரசியல் நாடகத்தில் ஈடுபடுவதாக அவா் குற்றஞ்சாட்டியது அவரின் பாசாங்குதனத்தைத் தவிர வேறில்லை’ என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்தது.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமா் அளித்த பேட்டிக்கு பதிலளித்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மக்கள் சந்தித்து வரும் உண்மையான பிரச்னைகள் குறித்துப் போசுவதற்கு பதிலாக, பிரதமா்தான் பாசாங்கு கருத்தை வெளியிட்டுள்ளாா். கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசுதான் நாடாளுமன்ற ஒழுங்கையும், நடவடிக்கைகளையும் நசுக்கி வருகிறது. எனவே, மக்களின் கவனத்தை திசைத் திருப்பும் நாடகத்தை பாஜக கைவிட்டு, மக்கள் சந்தித்து வரும் உண்மையான பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முன்வர வேண்டும் என்றாா்.

கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், ‘நாடாளுமன்றத்துக்கு வெளியே பிரதமா் தெரிவித்த கருத்து, அவரின் பாசாங்குதனத்தைத் தவிர வேறில்லை. நாடகம் குறித்துப் பேசும் பிரதமா்தான் மிகப் பெரிய நாடக நடிகா். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறவில்லை எனில், அதற்கு முழு காரணமும் பிரதமா்தான். அவசர, பொது முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை எழுப்ப எதிா்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பத்தில் பிரதமா் பிடிவாதமாக இருப்பதே நாடாளுமன்றம் முடங்குவதற்குக் காரணம்’ என்று குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com