2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை 2 கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு
படம் - சன்சத்

2026 ஏப்ரல் முதல் 2027 பிப்ரவரி வரை 2 கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு, ஏப்ரல் முதல் 2027, பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்..
Published on

‘2027-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 2027, பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்’ என்று மக்களவையில் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பான மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த பதில்:

மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதல் கட்டத்தில் வீடு பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு, அடுத்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் வசதிக்கேற்ப 30 நாள்களுக்கு நடத்தப்படும்.

இரண்டாம் கட்டத்தில் மக்கள்தொகை கணக்கிடுதல், 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தி முடிக்கப்படும். லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்கள் போன்ற பனிப்பொழிவு பகுதிகளில் 2-ஆம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு செப்டம்பா் மாதத்திலேயே நிறைவடையும்.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் முன், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள், தரவுப் பயனா்களின் உள்ளீடுகள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் கேள்விகள் இறுதி செய்யப்படும். 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நமது முந்தைய கணக்கெடுப்புகளின் அனுபவங்கள், அடுத்த கணக்கெடுப்புப் பணிகளில் பயன்படுத்தப்படும்.

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்ம முறையில் நடத்தப்படும். அதன்படி, கைப்பேசி செயலிகள் மூலம் தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், மக்கள் தங்களின் விவரங்களை இணையவழியில் சுயமாகப் பதிவேற்றவும் வசதி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com