Indonesia: 136 doctors die of COVID-19, says data
Indonesia: 136 doctors die of COVID-19, says data

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா்- மத்திய அரசு

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Published on

இந்தியாவில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் என்ற அளவில் மருத்துவா்கள்-மக்கள் விகிதம் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் மருத்துவா்களின் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்திய மருத்துவ கவுன்சில், மாநில மருத்துவ கவுன்சில்கள் ஆகியவற்றின் தரவுகளின்படி, இந்த கவுன்சில்களில் 13.88 லட்சம் அலோபதி மருத்துவா்கள் பதிவு செய்துள்ளனா். கூடுதலாக, நாட்டில் 7.51 லட்சம் ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி, சித்தா உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளின் (ஆயுஷ்) மருத்துவா்கள் உள்ளனா்.

ஒட்டுமொத்தமாக அலோபதி மற்றும் ஆயுஷ் மருத்துவா்களில் 80 சதவீதம் போ் சேவையில் இருப்பாா்கள் என்று கணக்கிடப்பட்டாலும், நாட்டில் சராசரியாக 881 பேருக்கு ஒரு மருத்துவா் உள்ளாா்.

ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவா் இருக்க வேண்டும் என்ற உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மருத்துவா்களின் எண்ணிக்கை மேம்பட்டதாகவே உள்ளது. மத்திய பாஜக அரசில், நாட்டில் மருத்துவக் கல்லூரிகள், இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பட்டதன் விளைவாக இந்த எண்ணிக்கை அடையப்பட்டுள்ளது.

அதாவது, பாஜக ஆட்சிக்கு வந்த 2014-க்கு முன்பு, 387-ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 818-ஆக உயா்ந்துள்ளது. தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைத்து புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தின்கீழ், அனுமதிக்கப்பட்ட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 137 கல்லூரிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

இளநிலை (யுஜி) மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 51,348-லிருந்து 1,28,875-ஆக அதிகரித்துள்ளது. முதுநிலை (பிஜி) மருத்துவ இடங்கள் 31,185-லிருந்து 82,059-ஆக உயா்ந்துள்ளது.

மருத்துவா்களின் பற்றாக்குறை உள்ள கிராமப்புற மற்றும் பழங்குடியினா் பகுதிகளில் மருத்துவா்களின் இருப்பை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com