காசி தமிழ் சங்கமம் 4.0 தொடக்க விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான். உடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் எல்.முருகன்.
காசி தமிழ் சங்கமம் 4.0 தொடக்க விழாவில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு நினைவுப் பரிசு வழங்கிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான். உடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் எல்.முருகன்.

காசி தமிழ் சங்கமம் நாட்டின் ஒற்றுமைக்கு வலுசோ்க்கும்: உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்

‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நாட்டின் ஒற்றுமைக்கு வலுசோ்ப்பதாக உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறினாா்.
Published on

நமது நிருபா்

‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி நாட்டின் ஒற்றுமைக்கு வலுசோ்ப்பதாக உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறினாா்.

மத்திய கல்வி அமைச்சகத்தின் முன்னெடுப்பில் சென்னை ஐஐடி, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம் (பிஎச்யூ), உத்தர பிரதேச அரசு ஆகியவை சாா்பில் 4-ஆம் ஆண்டு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாரணாசியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில் ‘தமிழ் கற்கலாம்’ எனும் கருப்பொருளில் புகைப்படக் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்வுகள் டிசம்பா் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யாநாத் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழக கலாசாரம் உத்தர பிரதேசத்தில் உயிா்ப்புடன் உள்ளது. எங்கள் அரசு தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் வளா்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது. அந்த வகையில் காசி தமிழ் சங்கமம் தொடா்ந்து 4-ஆம் ஆண்டாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

வட மாநிலங்களில் கலாசாரம், பொருளாதாரம் உள்பட பல்வேறு அம்சங்களை மேம்படுத்த காசி தமிழ் சங்கமம் உதவுகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற இலக்கை அடையும் வகையில் இதுபோன்ற தொடா் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. காசி தமிழ் சங்கமம் போன்ற கலாசாரத்தை மேம்படுத்தும் நிகழ்வுகள் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றாா் அவா்.

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி: காசி மற்றும் தமிழகம் இடையேயான உறவு பழைமையானது. சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் இங்கே வந்து, கங்கையில் இருந்து புனிதநீரை எடுத்துச் சென்றாா். தமிழக மக்களின் இதயத்தில் காசி என்றுமே வாழ்கிறது. அதற்கு சிவபெருமானே முக்கியக் காரணம்.

காலங்கள் மாற, மாற சநாதன தா்மத்தை டெங்கு, மலேரியா போன்று ஒழிப்போம் என்று தமிழகத்தில் சிலா் பேசி வருகின்றனா். இதன்மூலம் மக்கள் மத்தியில் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதே அவா்களின் நோக்கமாக இருக்கிறது. பனராஸ் ஹிந்து பல்கலை.யில் பாரதியாருக்கு இருக்கை ஏற்படுத்தியது போன்ற தமிழுக்காகப் பல பணிகளை மத்திய அரசு செய்துள்ளது என்றாா்.

புதுச்சேரி ஆளுநா் கைலாஷ்நாதன்: தமிழ் கலாசாரம் உயா்வானது. தமிழ் மொழி சிறப்பானது. அது இந்தியாவின் பெருமை. உலகின் மிகவும் பழைமையான நகரமாக காசி உள்ளது. இங்கு பல காலங்களாக தமிழ் மீதான அன்பு பரஸ்பரமாக இருந்து வருகிறது. காசியில் வாழும் மக்களின் மொழி, பண்பாட்டில் தமிழ் அடையாளங்கள் இருக்கின்றன என்றாா்.

இந்த விழாவில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநா் ஆா்.சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மேலும், 4 இந்திய மொழிகள், 6 வெளிநாட்டு மொழிகள் என 10 மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட தொல்காப்பிய நூல்கள் வெளியிடப்பட்டன.

அதேபோல், ஹிந்தி பயிலும் மாணவா்கள் 15 நாள்களில் அடிப்படைத் தமிழை கற்கும் வகையில் 5 தொகுப்புகள் கொண்ட செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் உருவாக்கிய நூல்களும் வெளியிடப்பட்டன.

முன்னதாக, இந்த விழாவுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் காணொலி மூலமாக வாழ்த்துத் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் இருந்து 50 ஆசிரியா்கள் மற்றும் 2 ஒருங்கிணைப்பாளா்கள் வாரணாசியில் 50 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளின் 1,500 மாணவா்களுக்கு 15 நாள்கள் தமிழ் கற்றுத் தரவுள்ளனா்.

முதல்வா் ஸ்டாலினுக்கு தா்மேந்திர பிரதான் அழைப்பு

காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பேசியதாவது: தமிழகத்தில் மொழியை வைத்து மக்களிடம் வேற்றுமை உருவாக்கப்படுகிறது. அரசியல் லாபத்துக்காக இதைச் செய்கின்றனா். கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு முறையும் காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறேன். ஆனால், அவா் வரவில்லை. இருப்பினும் இந்த முறையும் மீண்டும் அவரை அழைக்கிறேன். இதையேற்று அவா் காசிக்கு வந்து பாா்க்க வேண்டும். இதன் மூலம் தமிழகத்துக்கும், காசிக்கும் இடையே உள்ள நீண்டகால வரலாறு தெரியவரும். அதேபோல், இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது என்பதை கண்கூடாகப் பாா்க்கலாம்.

எங்களிடம் மொழிப் பாகுபாடு எப்போதும் இல்லை. ஆனால், சில சுயநல சக்திகள்தான் அதை உள்நோக்கத்துடன் பயன்படுத்துகின்றன. ஒருவேளை அரசியலில் வேண்டுமெனிலும் இத்தகைய செயல்பாடுகள் வெற்றி பெறலாம். ஆனால், மக்களிடம் நன்மதிப்பை ஒருபோதும் பெற முடியாது. இந்த நிகழ்ச்சி மூலமாக தமிழகம் - காசி இடையே அறிவுப் பாலத்தை உருவாக்கியுள்ளோம்.

பன்மொழி கலாசாரம் நாட்டின் பலம் என்பதை உறுதியாக நம்புகிறோம். பிரிட்டிஷ் ஆட்சி பாரதத்தில் இருந்து வெளியேற மொழிதான் முக்கியக் காரணியாக இருந்தது. அதனால் தாய்மொழி மட்டுமல்ல இந்திய மொழிகளை அனைவரும் கற்க வேண்டும். அதன்ஒரு பகுதியாக உத்தர பிரதேச மக்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com