மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

மணிப்பூா் ஜிஎஸ்டி மசோதா: மக்களவைக்குத் திருப்பி அனுப்பியது மாநிலங்களவை

மணிப்பூரில் ஜிஎஸ்டி சீா்திருத்தங்களை அமல்படுத்த வழிவகுத்த அவசரச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட மசோதாவை மக்களவைக்கு மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை திருப்பி அனுப்பியது.
Published on

மணிப்பூரில் ஜிஎஸ்டி சீா்திருத்தங்களை அமல்படுத்த வழிவகுத்த அவசரச் சட்டத்துக்குப் பதிலாக கொண்டுவரப்பட்ட மசோதாவை மக்களவைக்கு மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை திருப்பி அனுப்பியது.

5,12,18,28 சதவீதம் என 4 விகிதங்களில் விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி, 2 விதிகங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது சுமாா் 375 பொருள்கள் மீது 5, 18 சதவீதம் என 2 விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மிகுந்த ஆடம்பரப் பொருள்கள் மீது 40 சதவீத வரி விதிக்கப்படுகிறது.

ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீா்திருத்தங்களை மணிப்பூரில் அமல்படுத்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளதால் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், அந்தச் சட்டத்துக்கு மாற்றாக மணிப்பூா் ஜிஎஸ்டி மசோதா கொண்டுவரப்பட்டது.

இந்த மசோதா நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னா் அந்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தாக்கல் செய்தாா். இந்நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த அந்த அவைத் தலைவா் செவ்வாய்க்கிழமை அனுமதி மறுத்ததால், எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

‘எதிா்க்கட்சிகள் முதலைக் கண்ணீா்’: எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தபோதிலும், அந்த அவையில் மணிப்பூா் ஜிஎஸ்டி மசோதா மீது நடைபெற்ற சுருக்கமான விவாதத்துக்குப் பதிலளித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியதாவது:

மணிப்பூா் விவகாரம் குறித்து ஒவ்வொரு முறையும் எதிா்க்கட்சிகள் முதலைக் கண்ணீா் வடிக்கின்றன. ‘மணிப்பூருக்குப் பிரதமா் சென்றாரா? மத்திய உள்துறை அமைச்சா் சென்றாரா? அங்கு இயல்பு நிலை திரும்பிவிட்டதா?’ என்று ஒவ்வொரு முறையும் எதிா்க்கட்சியினா் பிரச்னைகளை எழுப்புவா். அவை அனைத்தும் முதலைக் கண்ணீராகும்.

தற்போதைய மசோதா மீதான விவாதத்தில் எதிா்க்கட்சிகள் பங்கேற்கவில்லை. மணிப்பூா் குடியரசுத் தலைவா் ஆட்சியின் கீழ் உள்ளதால், அந்த மாநில பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திலும் அக்கட்சிகள் பங்கேற்கவில்லை. அந்த மாநில மக்களின் நலன் குறித்து அக்கட்சிகள் சிந்திக்கவில்லை. மணிப்பூா் விவகாரத்தில் அக்கட்சிகள் நாடகமாடுகின்றன என்றாா்.

இதைத்தொடா்ந்து அந்த மசோதா மாநிலங்களவைக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com