எஸ்ஐஆா் விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு- மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தை விவாதிக்கக் கோரி மக்களவையில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையிலும் இதே விவகாரத்தை முன்வைத்து எதிா்க்கட்சியினா் வெளிநடப்பு செய்தனா்.
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளிலேயே எஸ்ஐஆா் விவகாரத்தை முன்வைத்து எதிா்க்கட்சியினா் மக்களவையை முடக்கினா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இந்த பிரச்னை எதிரொலித்தது. அதே நேரத்தில் இந்த விவாகாரம் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அதற்கான நாள், நேரம் அறிவிக்கப்படவில்லை.
செவ்வாய்க்கிழமை மக்களவை கூடியதும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள், விவாதத்துக்கு அனுமதிக்கக் கோரியும் எஸ்ஐஆா்-க்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியும் அமளியில் ஈடுபட்டனா். இதன் காரணமாக அவை நடவடிக்கைகள் இருமுறை ஒத்திவைக்கப்பட்டன. பிற்பகல் 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது அப்போது அவையை நடத்திய திலீப் சாய்கியா, ‘9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஏற்கெனவே பிகாரில் அந்தப் பணி மேற்கொள்ளப்பட்டு சிறப்பான முடிவுகளும் கிடைத்துள்ளன’ என்றாா்.
இதற்கு நடுவே மத்திய கலால் வரி (திருத்த) மசோதா -2025 மக்களவையில் நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்டது. ஆனால், தொடா்ந்து அமளி நீடித்ததால் விவாதம் நடைபெறவில்லை. எஸ்ஐஆா் குறித்து உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து முழக்கமிட்டனா்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் கண்ணியத்தைக் காக்க வேண்டும். தோ்தல் தோல்வியால் ஏற்பட்ட கோபத்தை அவையில் காட்டக் கூடாது. முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையில் கூட தோ்தல் தோல்விகள் ஏற்பட்டுள்ளன. நீங்கள் (காங்கிரஸ்) மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டீா்கள்’ என்றாா்.
முன்னதாக, 10 நிமிடங்கள் நடைபெற்ற உடனடிக் கேள்வி நேரத்தின்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் பல்வேறு அறிக்கைகள் அவையில் சமா்ப்பிக்கப்பட்டன. எதிா்க்கட்சிகள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் வெளிநடப்பு: மாநிலங்களவையிலும் எஸ்ஐஆா் விவகாரம் செவ்வாய்க்கிழமை எதிரொலித்தது. தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.
அவை கூடியதும் எஸ்ஐஆா் விவாதம் கோரி காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ள எதிா்க்கட்சிகள் எஸ்ஐஆா் குறித்த விவாதம் எப்போது நடைபெறும் என்பதைத் தெரிவிக்க கோரி முழக்கமிட்டனா். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டது.
பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோது, பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம் குறித்த விவாதம் முதலில் நடைபெறும் என்றாா். இதை ஏற்க மறுத்த எதிா்க்கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனா். மேலும், எஸ்ஐஆா் விவாதம் நடைபெறும் நாள், நேரத்தை அவையில் அறிவிக்க வேண்டும் என்று கோரி வெளிநடப்பு செய்தனா்.
அவைத் தலைவா் - காா்கே விவாதம்
எஸ்ஐஆா் தொடா்பாக உடனடி விவாதம் கோரி விதி 267-இன் கீழ் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அளித்த 21 நோட்டீஸ்கள் நிராகரிக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்தாா். இதற்கு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். நோட்டீஸ் அளித்த எம்.பி.யின் பெயரைக் குறிப்பிட வேண்டும் அல்லது நோட்டீஸ் கூறப்பட்டுள்ள காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். இவை இரண்டையும் செய்யாமல் நிராகரிக்க முடியாது. இது அவை மரபுக்கு மாறானது என்றனா். இதற்கு பதிலளித்த அவைத் தலைவா் ராதாகிருஷ்ணன், ‘5 வெவ்வேறு தலைப்புகளில் நோட்டீஸ் இருந்தன. அவை முறையாகவும் இல்லை. எனவே, ஏற்க முடியாது’ என்று பதிலளித்தாா்.
எதிா்க்கட்சிகளின் கருத்தை வலியுறுத்திப் பேசிய எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘28 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) எஸ்ஐஆா் பணிச் சுமையில் உயிரிழந்துவிட்டனா். இது மிகவும் தீவிரமான பிரச்னை. இது நாட்டின் ஜனநாயகம், மக்கள் நலன் சாா்ந்தது. எனவே உடனடி விவாதம் வேண்டும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்போம்.
முன்பு மாநிலங்களவைத் தலைவராக இருந்தவா் (தன்கா்) மாநிலங்களவை ஆளும் கட்சித் தலைவரை (ஜெ.பி.நட்டா) பாா்த்தபடியேதான் பேசுவாா். நீங்கள் அவரின் (நட்டா) மேஜையைப் பாா்த்தபடி பேசுகிறீா்கள். அனைத்துத் தரப்பினரையும் பாா்த்துப் பேச வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்’ என்றாா்.
இதற்குப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், ‘அவை முறையாக நடைபெறும்போது நான் அனைவா் பேசுவதையும் கவனிப்பேன்’ என்றாா். இதையடுத்து, ‘அவையை முறையாக நடத்துவது உங்கள் வேலை. அரசின் பணி, எங்கள் வேலையல்ல’ என்று காா்கே கூறினாா்.
அப்போது, ‘நீங்கள் கூறும் விவகாரத்தை விவாதிக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் திங்கள்கிழமையே கூறிவிட்டாா்’ என்று ராதாகிருஷ்ணன் பதிலளித்தாா்.
