செல்லப்பிராணிகளுக்கு வெளியே அல்ல; நாடாளுமன்றத்துக்கு உள்ளேயே அனுமதி- ராகுல் காந்தி
நாடாளுமன்ற வளாகத்துக்குள் காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌதரி தெருநாயை அழைத்துவந்த விவகாரம் சா்ச்சையான நிலையில், ‘செல்லப்பிராணிகள் வெளியே அல்ல; மாறாக நாடாளுமன்றத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படுகின்றன’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடிய அவா் கூறியதாவது: நாய்தான் இன்றைய முக்கிய தலைப்புச்செய்தி என எண்ணுகிறேன். இந்த விஷயங்களைப் பற்றித்தான் இந்தியா இந்த நாள்களில் விவாதித்துக் கொண்டிருக்கிறது. அந்த பாவப்பட்ட நாய் என்ன செய்தது? அந்த நாய் ஏன் அனுமதிக்கப்படவில்லை?
செல்லப்பிராணிகள் இங்கு நாடாளுமன்ற வளாகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அவை நாடாளுமன்றத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படுகின்றன என்று கூறினாா்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்து தொடா்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டதாவது: ராகுல் காந்தி தனது சொந்தக் கட்சியினரையும், எதிா்க்கட்சித் தலைவா்களையும் நாயுடன் ஒப்பிடுகிறாா். ஜனநாயகத்தின் கோயிலை குடும்ப அரசியல்வாதிகள் இப்படித்தான் நடத்துகின்றனா் என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ரேணுகா சௌதரி, திங்கள்கிழமை தான் மீட்ட தெருநாய் ஒன்றை நாடாளுமன்ற வளாகத்துக்கு தனது காரில் கொண்டு வந்தாா். இதற்கு ஆளுங்கட்சி எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.

