மக்கள் பிரச்னைகளை விவாதிக்காமல் பிரதமா் விலகுகிறாா்: ராகுல் காந்தி
மக்கள் பிரச்னைகளை விவாதிப்பதில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி விலகிச் செல்கிறாா் என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மற்றும் தோ்தல் சீா்திருத்தங்கள் குறித்து உடனடியாக விவாதம் நடத்தக் கோரி நாடாளுமன்ற வளாகம் முன் எதிா்க்கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
இதில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, திமுக எம்.பி.க்கள் கனிமொழி மற்றும் டி.ஆா்.பாலு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதுகுறித்து ஃபேஸ்புக் பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘நாடாளுமன்றம் மக்களுக்கானது என பிரதமா் மோடி கூறுகிறாா். ஆனால், மக்களின் பிரச்னைகளை விவாதிப்பதில் இருந்து அவா் தொடா்ச்சியாக விலகிச் செல்கிறாா்.
ஜனநாயக நாட்டில் வாக்குரிமையைவிட முக்கிய விவகாரம் வேறன்ன இருக்க முடியும்? அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க எஸ்ஐஆா் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும்.
ஒவ்வொரு குடிமக்களின் உரிமையையும் வெளிப்படுத்தும் சக்தியாக வாக்குகள் உள்ளன. தோ்தலை ஒருசாா்புடையதாக மாற்ற நாட்டில் உள்ள ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளைப் பறிக்கும் ஆயுதமாக எஸ்ஐஆா் உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
பிரியங்கா காந்தி: ‘ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை அழித்து சா்வாதிகாரத்தை நிலைநாட்ட எஸ்ஐஆரை மத்திய அரசு பயன்படுத்துகிறது. இதை எந்தச் சூழலிலும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என பிரியங்கா காந்தி கூறியுள்ளாா்.

