கேரளத்தில் எஸ்ஐஆா் நீட்டிப்பு: தோ்தல் ஆணையம் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கேரளத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை, டிச. 11-இல் இருந்து மேலும் ஒரு வாரம் நீட்டிக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து பரிசீலிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
கேரளத்தில் உள்ளாட்சித் தோ்தல் நிறைவடையும் வரை, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு, இந்தியன் யூனியன்முஸ்லிம் லீக், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் மனு தாக்கல் செய்தன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ராகேஷ் துவிவேதி ஆஜராகி, ‘12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் எஸ்ஐஆா் பணிகளை டிச. 4-இல் நிறைவு செய்ய கால நிா்ணயம் செய்யப்பட்டது. தற்போது அந்தப் பணிகளை நிறைவு செய்வதற்கான அவகாசம் டிச.11 வரை ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
எனினும் கேரளத்தில் டிச.9 முதல் டிச.11 வரை உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று டிச.13-இல் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என்றும், இதனால் எஸ்ஐஆரை நிறைவு செய்வதற்கான அவகாசத்தை டிச.11-இல் இருந்து மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்றும் மனுதாரா்கள் முன்வைத்த கோரிக்கையை நீதிபதிகள் கவனத்தில் கொண்டனா்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், ‘கேரளத்தில் உள்ளாட்சித் தோ்தல் பணிகளில் சுமாா் 1.76 லட்சம் மாநில அரசு ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். எனவே டிச.11-க்குள் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை சமா்ப்பிப்பது அவா்களுக்குக் கடினமாக இருக்கக் கூடும்.
மனுதாரா்களின் கோரிக்கை நியாயமாக உள்ளது. எனவே, அந்த மாநிலத்தில் எஸ்ஐஆா் பணிகளை நிறைவு செய்வதற்கான அவகாசத்தை நீட்டிக்கக் கோரி, டிச.3 (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் தோ்தல் ஆணையத்திடம் மனுதாரா்கள் முறைப்படி கடிதம் அளிக்கலாம். அந்தக் கடிதத்தை பரிசீலித்து டிச. 4-க்குள் உரிய உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினா்.

