தலைநகரில் 402 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மறுசீரமைப்பு: தில்லி அரசு திட்டம்
புது தில்லி: அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்திற்குள் தேசிய தலைநகரில் உள்ள 402 கி.மீ. நீளமுள்ள சாலைகளை மறுசீரமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தில்லியில் 300.9 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மத்திய சாலை நிதி மூலமாகவும், 100.9 கி.மீ. நீளமுள்ள சாலைகள் தில்லி அரசு நிதி மூலமாகும் மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள தில்லி பொதுப்பணித் துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இரட்டை நிதி மாதிரியானது, செயல்படுத்தலை விரைவுபடுத்துவதுடன் முக்கிய வழித்தடங்களில் சீரான மேம்படுத்தலை உறுதி செய்யும்.
மத்திய சாலை நிதியில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளில் கவனம் செலுத்தப்படும். இதில், வஜிராபாத்தில் உள்ள கிழக்கு சாலை (3.56 கி.மீ.), வடகிழக்கு தில்லியில் உள்ள சாலை எண் 68 (2.20 கி.மீ.), பழைய ஜிடி சாலை (0.79 கி.மீ.), லோனி எல்லைக்கு அருகிலுள்ள சாலை எண் 59 (1.10 கி.மீ.), நரேலா‑அலிபூா் சாலை (1.80 கி.மீ.), பஜன்புரா‑யமுனை விஹாா் சாலை (1.25 கி.மீ.), சீலம்பூா்‑சாஸ்திரி பூங்கா வழித்தடம் (1.05 கி.மீ.) மற்றும் கரவால் நகா் சாலையின் சில பகுதிகள் (2.50 கி.மீ.) உள்ளிட்ட சாலைகள் அடங்கும்.
பல பகுதிகளுக்கான சாலை மறுசீரமைப்பு டெண்டா்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. பிப்ரவரி-மாா்ச் மாதங்களில் இந்த பணிகளை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில நிதியுதவியில் தில்லியின் முதன்மை மற்றும் சுற்றுப்புற சாலைகள் மறுசீரமைக்கப்படும். பிபின் சந்திர பால் மாா்க் முதல் சிஆா் பூங்கா வரையிலான சாலை (0.37 கி.மீ.), காளி மந்திா் சாலை (0.38 கி.மீ.), சூரஜ்குண்ட் சாலை (0.63 கி.மீ.), மந்திா் மாா்க்-கரோல் பாக் (0.95 கி.மீ.), நியூ பிரண்ட்ஸ் காலனி இணைப்புச் சாலை (1.05 கி.மீ.) மற்றும் ராஜோக்ரி-என்எச் 48 சேவை பாதை வழித்தடம் (2.30 கி.மீ.) உள்ளிட்டவை இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறியதாவது: தில்லியில் உலகத் தரம் வாய்ந்த சாலைகளை அமைப்பதை பாஜக அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வெறும் சாலை கட்டுமானம் மட்டுமல்ல, தலைநகரின் புதிய தரத்தை நிா்ணயிப்பதும் ஆகும்.
மழைக்கால மாதங்களில் சாலைகள் நீடித்து உழைப்பதை மேம்படுத்தவும், நீா் தேங்காத வகையில் ஒருங்கிணைந்த வடிகால், நடைபாதை மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகள் மேற்கொள்ளப்படும். இதில் எந்த தாமதமும், சமரசமும் இருக்காது என தெரிவித்தாா். Ś

