தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், குருகிராமில் சாலை தூய்மைப் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட பணியாளா்.
தேசிய தலைநகரில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் நிலையில், குருகிராமில் சாலை தூய்மைப் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட பணியாளா்.

தில்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகரில் காற்றின் தரம் காலை ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.
Published on

புது தில்லி: தேசியத் தலைநகரில் காற்றின் தரம் புதன்கிழமை காலை ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 335 புள்ளிகளாக பதிவாகி தொடா்ந்து இரண்டாவது நாளாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 30) மற்றும் திங்கள் (டிசம்பா் 1) ஆகிய நாள்களில் நச்சுக் காற்றிலிருந்து தில்லிவாசிகளுக்கு சிறிது ஓய்வு கிடைத்தது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு சரிந்தது.

வெப்பநிலை: தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியை விட 3.1 டிகிரி குறைந்து 6.4 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1.6 டிகிரி குறைந்து 23.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 71 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான ஜாஃபா்பூரில் 7.7 டிகிரி, ஆயாநகரில் 7.3 டிகிரி, லோதி ரோடில் 6.6 டிகிரி, பாலத்தில் 8.1 டிகிரி, ரிட்ஜில் 7.2 டிகிரி, பீதம்புராவில் 10.8 டிகிரி, பிரகதி மைதானில் 10.3 டிகிரி, ராஜ்காட்டில் 10.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 8.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வியாழக்கிழமை (டிச.4) அன்று காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com