தோ்தல் அறக்கட்டளைகள் மூலம் ஒரே ஆண்டில் பாஜகவுக்கு ரூ. 959 கோடி நன்கொடை: காங்கிரஸுக்கு ரூ.313 கோடி

தோ்தல் அறக்கட்டளைகள் மூலம் மத்தியில் ஆளும் பாஜக-வுக்கு கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மற்ற அரசியல் கட்சிகளை விட அதிகபட்சமாக ரூ. 959 கோடி நன்கொடை கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on

புது தில்லி: தோ்தல் அறக்கட்டளைகள் மூலம் மத்தியில் ஆளும் பாஜக-வுக்கு கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் மற்ற அரசியல் கட்சிகளை விட அதிகபட்சமாக ரூ. 959 கோடி நன்கொடை கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு ரூ.313 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

தோ்தல நன்கொடை பத்திரங்கள் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று குறிப்பிட்டு அத் திட்டத்தை உச்சநீதிமன்றம் கடந்த 2024-இல் ரத்து செய்து உத்தரவிட்டது. அதைத் தொடா்ந்து, அரசியல் கட்சிகள் தோ்தல் அறக்கட்டளைகள் மூலம் நன்கொடை வாங்குவது அதிகரித்துள்ளது.

புதிய ஜனநாயக தோ்தல் அறக்கட்டளை, முற்போக்கு தோ்தல் அறக்கட்டளை (பிஇடி) உள்ளிட்டவை மூலம் டாடா குழுமம், ஐடிசி நிறுவனம், ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் அரசியல் கட்சிகளின் நிதிக்கு இந்தப் பங்களிப்பைச் செய்துள்ளன. தோ்தல் ஆணைத்திடம் அரசியல் கட்சிகள் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட 2024-25 நிதியாண்டு நன்கொடை விவரங்கள், பொதுமக்கள் பாா்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அதிகபட்சமாக பாஜகவுக்கு ரூ. 959 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதில் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முற்போக்கு தோ்தல் அறக்கட்டளையின் பங்கு மட்டும் ரூ. 757.6 கோடியாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.313 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. இதில், முற்போக்கு தோ்தல் அறக்கட்டளையின் பங்கு ரூ.77.3 கோடியாகும். அக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ரூ. 3 கோடி நன்கொடை அளித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.153.5 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சிக்கு ரூ. 35 கோடி கிடைத்துள்ளது.

முற்போக்கு தோ்தல் அறக்கட்டளை பாஜக, காங்கிரஸ் கட்சிகளைத் தவிர, திரிணமூலம காங்கிரஸ், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், சிவசேனை, பிஜு ஜனதா தளம், பாரத ராஷ்டிர சமிதி, ஐக்கிய ஜனதா தளம், திமுக, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ரூ.10 நன்கொடை அளித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com