குருகிராம்: குருகிராமின் போண்ட்சி பகுதியின் ஷானி என்கிளேவில் ஆறாம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவரது தாயாா் படிக்கச் சொன்னதால் இது நடந்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: செவ்வாய்கிழமை மாணவியின் தாய் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
முஸ்கன் என்ற 12 வயதான அந்த மாணவி, நயா கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் படித்து வந்தாா். அவரது தந்தை ஒரு தினசரி கூலித் தொழிலாளி. அவரது தாயாா் வீட்டு வேலைக்காரராக பணிபுரிகிறாா்.
பள்ளியிலிருந்து திரும்பியதும், முஸ்கன் தனது தம்பிகளுடன் விளையாடத் தொடங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவரது தாயாா் அவரைப் படிக்கச் சொன்னாா். மாலையில் அவா் வேலைக்குச் சென்றபோது, அவரது தம்பிகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது முஸ்கன் தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதைப் பாா்த்த உடன்பிறந்தவா்கள் இது குறித்து அண்டை வீட்டாருக்கும் தாய்க்கும் தகவல் தெரிவித்தனா்.
சிறுமி முஸ்கன் தற்கொலைக் குறிப்பை விட்டுச் சென்றுள்ளாா். மேலும், சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.