இண்டிகோ (கோப்புப்படம்)
இண்டிகோ (கோப்புப்படம்)ANI

ஊழியர்கள் பற்றாக்குறை? இண்டிகோவின் 70 விமானங்கள் ரத்து!

இண்டிகோவின் 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது பற்றி...
Published on

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக 70-க்கும் மேற்பட்ட விமானங்களை இண்டிகோ விமான நிறுவனம் புதன்கிழமை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் விமான நிலைய போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு மற்றும் மும்பை விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் 70-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன. மேலும், பல்வேறு விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இண்டிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”தொழில்நுட்ப சிக்கல்கள், விமான நிலைய நெரிசல் மற்றும் செயல்பாட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாள்களில் பல விமானங்கள் தவிர்க்க முடியாத வகையில் தாமதமானது, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விமானிகள் மற்றும் விமான பணிப்பெண்களுக்கு போதுமான ஓய்வு நேரத்தை உறுதி செய்யும் வகையில், விமான கடமை நேர வரம்புகள் இரண்டாம் கட்ட விதிமுறைகளை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அமல்படுத்தியதில் இருந்து இண்டிகோ நிறுவனம் ஊழியர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில நாள்களாகவே இந்த பிரச்னையில் இண்டிகோ நிறுவனம் சிக்கியிருந்ததாகவும், செவ்வாய்க்கிழமை முதல் நிலைமை மிக மோசமடைந்ததால், நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் பல விமானங்கள் ரத்தாகி இருப்பதாகவும் தெரிவித்தன.

ஆறு முக்கிய உள்நாட்டு விமான நிலையங்களில் இருந்து செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட இண்டிகோவின் 65 சதவீத விமானங்கள் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சக வலைத்தள தரவுகள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை மட்டும் ஏர் இந்தியா 32.8%, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 21.5%, ஸ்பைஸ்ஜெட் 17.5%, ஆகாசா ஏர் 26.80% விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன.

Summary

IndiGo cancels over 70 flights due to crew shortages

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com