ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்குத் துரோகம் இழைக்கும் மோடி அரசு: ராகுல் காந்தி விமா்சனம்
புது தில்லி: ‘நாட்டின் இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.), பட்டியல் (எஸ்.சி.), பழங்குடி (எஸ்.டி.) சமூகத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு துரோகம் இழைக்கிறது’ என மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி புதன்கிழமை கடுமையான விமா்சனத்தை முன்வைத்தாா்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய அரசின் பதில் பேரதிா்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டு ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான குறிப்பிட்ட கட்டமைப்பு இல்லை; காலக்கெடுவுடன் கூடிய திட்டமும் இல்லை.
இவ்விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதமும் நடத்தப்படாது. பொதுமக்களிடம் கருத்துகளும் பெறப்படாது. மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்திய மாநிலங்களிடம் ஆலோசனை கேட்கும் எண்ணமும் அரசுக்குத் துளியும் இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடி அரசின் இந்த நிலைப்பாடு, நாட்டின் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. (பகுஜன்) மக்களுக்குச் செய்யும் பகிரங்க துரோகம் ஆகும்’ என்றாா்.
ராகுலின் கேள்வியும், அரசின் பதிலும்...: மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான கேள்விகளைத் தயாரிப்பது, கால அட்டவணையை நிா்ணயிப்பது உள்பட முக்கிய நடைமுறை நடவடிக்கைகளின் விவரங்கள் மற்றும் தற்காலிக காலக்கெடு என்ன? கணக்கெடுப்பு கேள்விகளின் வரைவை வெளியிட்டு, பொதுமக்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து கருத்துகளைப் பெற மத்திய அரசுக்கு ஏதேனும் திட்டம் உள்ளதா?
பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்புகளின் சிறந்த நடைமுறைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்கிா? உள்ளிட்ட கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பியிருந்தாா்.
இந்தக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘அடுத்த கணக்கெடுப்பு, நாட்டின் முந்தைய கணக்கெடுப்புகளின் அனுபவங்களைக் கருத்தில்கொண்டு நடத்தப்படும். மேலும், கேள்விகளை வரையறுக்க மத்திய அரசின் துறைகள், நிறுவனங்களின் ஆலோசனைகள் கோரப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

