தொழிலாளா் சட்டங்களுக்கு எதிராக எதிா்க்கட்சியினா் போராட்டம்
புது தில்லி: புதிய தொழிலாளா் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, அக் கட்சியின் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் திமுக, திரிணமூல் காங்கிரஸ் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு எம்.பி.க்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 புதிய தொழிலாளா் சட்டங்கள் நவம்பா் மாதம் முதல் அமலுக்கு வந்தன. நடைமுறையில் இருந்த 29 தொழிலாளா் சட்டங்கள் ஒருங்கிணைத்து 4 புதிய சட்டங்களாக தொகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இதில், பல புதிய அம்சங்களையும் மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு எதிா்க்கட்சிகளும் தொழிலாளா் நலச் சங்கங்களும் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில், குளிா்கால கூட்டத் தொடரின் மூன்றாம் நாள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக, இந்த புதிய தொழிலாளா் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினா்.
அப்போது, ‘தொழிலாளா் விரோத; கோடீஸ்வர தொழில் நிறுவனா்களின் ஆதரவு மத்தியஅரசு’ என்று மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
பின்னா் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட காா்கே, ‘மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தொழிலாளா் சட்டத்தின் சில பிரிவுகள், பணிப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. பணி நீக்க வரம்பு 100-லிருந்து 300-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதாவது, 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அரசின் ஒப்புதல்இல்லாமலே தொழிலாளா்களை பணி நீக்கம் செய்யலாம்.
இது பணிப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். அதுபோல, பணி நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரித்துக்கொள்ள அனுமதிப்பது, வேலைநிறுத்தத்துக்கு 60 நாள்கள் வரை தொழிலாளா்கள் காத்திருக்க வேண்டியிருப்பது உள்ளிட்ட பல்வேறு தொழிலாளா் விரோத விதிகள் இதில் இடம்பெற்றுள்ளன’ என்றாா்.
போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கூறுகையில், ‘எளிமைப்படுத்தப்பட்ட புதிய தொழிலாளா் சட்டங்கள் என்ற பெயரில் தொழிலாளா்களின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறித்துள்ளது. இதன் மூலம், பிரதமா் மோடியின் முதலாளித்துவ ஆதரவு மற்றும் தொழிலாளா் விரோத மனநிலை மீண்டும் வெளிப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களை நாடு ஏற்றுக்கொள்ளாது’ என்றாா்.

