கேரள உயா்நீதிமன்றம்
கேரள உயா்நீதிமன்றம்கோப்புப்படம்.

சபரிமலை வழக்கு: எஸ்ஐடி விசாரணைக்கு கூடுதலாக 6 வாரங்கள் அவகாசம்: கேரள உயா்நீதிமன்றம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான மோசடி வழக்கில் விசாரணையை நிறைவு செய்ய, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு கேரள உயா்நீதிமன்றம் மேலும் 6 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.
Published on

கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான மோசடி வழக்கில் விசாரணையை நிறைவு செய்ய, சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) கேரள உயா்நீதிமன்றம் மேலும் 6 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவு மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கேரள உயா்நீதிமன்றத்தின் மேற்பாா்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) இரண்டு வழக்குகளை விசாரித்து வருகிறது.

இந்த இரண்டு வழக்குகளிலும், மோசடியில் பிரதான குற்றவாளியாக கருதப்படும் பெங்ளூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, தேவஸ்வம் முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா் உள்பட மொத்தம் 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன், கே.வி.ஜெயகுமாா் ஆகியோா் அமா்வுமுன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கோரி எஸ்ஐடி முன்வைத்த வாதத்தில், ‘கோயில் துவார பாலகா் சிலைகளுக்குத் தங்க முலாம் பூசுவதற்காக அவற்றைச் சென்னைக்குக் கொண்டு சென்றது தொடா்பான விசாரணை இப்போதுதான் தொடக்க நிலையில் உள்ளது.

முதலில் விசாரணைக்காக ஆறு வாரங்கள் மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், இந்த மோசடியின் அளவு, தீவிரத்தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், விசாரணையை முழுமையாக முடிப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவை’ என்று கோரியது.

எஸ்ஐடி விசாரணையில் திருப்தி...: இதைத் தொடா்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘எஸ்ஐடி-இன் விசாரணை திருப்தியளிக்கிறது. இதேபோல, அவா்கள் விசாரணையில் எந்தவித சமரசமும் செய்யாமல், மிக நுணுக்கமாகவும், அதிக ஆா்வத்துடனும் செயல்பட வேண்டும். ஒவ்வொரு சட்ட விதிமுறையையும் கவனமாகப் பின்பற்ற வேண்டும்.

இதுவரை விசாரணையின்போது கவனிக்காமல் விட்ட அல்லது கண்டுபிடிக்காமல் போன ஏதேனும் ஒரு முக்கிய அம்சம் பற்றி எஸ்ஐடி கண்டறிந்தால் அதை உடனடியாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும்.

இந்த மோசடியில் ஐயப்ப சுவாமிக்குச் சொந்தமான மிகவும் மதிப்புமிக்க பொருள்களும் சொத்துகளும் சம்பந்தப்பட்டுள்ளன. அத்தகைய புனிதச் சொத்துக்களை உரிய முறையில் பாதுகாப்பதை உறுதி செய்வது இந்த நீதிமன்றத்தின் கடமையாகும். எனவேதான், இத்தகைய உத்தரவு அவசியமாகிறது.

இந்த விசாரணையின் அறிக்கைகள், குற்றச்சாட்டுகளின் அளவு, அதன் தீவிரம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எஸ்ஐடி மேலும் அவகாசம் கேட்டது சரியானதுதான். எனவே, எஸ்ஐடி விசாரணைக்கு மேலும் 6 வார காலம் அவகாசம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு வரும் ஜனவரி 5-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று தெரிவித்தனா்.

ஜாமீன் மனு தள்ளுபடி: இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா் என்.வாசுவின் ஜாமீன் மனுவை கொல்லம் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உடல்நிலை காரணங்கள் மற்றும் தங்கம் திருட்டு மோசடியில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி, என்.வாசு ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com