

அண்மையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்து மதம் குறித்து பேசிய கருத்துக்கு பாஜக மூத்த தலைவர்கள் தங்களது விமர்சனங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்து மதம் குறித்து ரேவந்த் ரெட்டி பேசியதற்கு, தெலங்கானா பாஜக அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பாஜக தொண்டர்கள் ரேவந்த் ரெட்டியின் உருவ பொம்மையை எரித்தனர்.
முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்து விரோத கருத்துகளைப் பேசியதற்கு, மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்த மாநில பாஜக தலைவர் ராமச்சந்திர ராவ் உத்தரவிட்டார்.
’தெலங்கானாவிலும் இந்துக்கள் ஒன்றுசேர நேரம் வந்துவிட்டது’
ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, "காங்கிரஸ் என்றால் முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்றால் காங்கிரஸ்" என்று ரேவந்த் ரெட்டி கூறியதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
இந்திய மஜ்லிஸ்-இ-இட்டேஹதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்.) கட்சியுடான நட்பு காரணமாக, இந்துக்கள் மற்றும் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களுக்கு எதிராக ஆணவமான கருத்துகளை ரேவந்த் ரெட்டி பேசுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தெலங்கானாவிலும் இந்துக்கள் ஒன்றுசேர நேரம் வந்துவிட்டது. ரேவந்த் ரெட்டி, காங்கிரஸ் கட்சிக்கு இந்துக்களின் சக்தியைக் காட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸின் ஆணவத்தை வாக்குரிமையைப் பயன்படுத்தி அகற்ற வேண்டும், இதுதான் அவர்கள் ஆட்சிக்கு வர உதவியது.
இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்
காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசும்போது, ’காங்கிரஸ் கட்சியில் சுதந்திரம் இருப்பதால், இந்தக் கட்சி 140 ஆண்டுகளாக இருந்து வருகிறது. எல்லா வகையான மனநிலைக் கொண்டவர்களும் இங்குள்ளார்கள்.
இந்து மதத்தில் எத்தனை கடவுள்கள் இருக்கிறார்கள்? எத்தனை தெய்வங்கள்? 3 கோடியா? ஏன்? திருமணம் செய்து கொள்ளாதவர்களுக்கு அனுமன் இருக்கிறார், இரண்டு முறை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மற்றொரு கடவுள் இருக்கிறார், மது அருந்துபவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார், எல்லையம்மன் போன்ற கடவுளுக்கு மது மற்றும் கோழியைப் படைக்கிறார்கள், அரிசி மற்றும் பருப்பை சாப்பிடுபவர்களுக்கும் ஒரு கடவுள் இருக்கிறார். எல்லா வகையான கடவுள்களும் இருக்கிறார்கள்’ என்று அவர் கூறினார்.
கடவுள் விஷயத்தில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த முடியாதபோது, அரசியல் தலைவர், மாவட்ட தலைவர்கள் எவ்வாறு ஒருமித்த கருத்தோடு இருப்பார்கள்” என்றார்.
வலுக்கும் கண்டனங்கள்
இந்துக்களுக்கு எதிரான பிரசாரத்தை காங்கிரஸ் தொடங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டினார்.
”இது போன்ற விஷயத்தைக் கூறுபவர்கள் இந்திய அரசியலமைபை நம்புவதில்லை, இந்திய கலாசாரத்துடன் தொடர்பில்லாதவர்களாக இருக்கிறார்கள்.ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் லீக் காங்கிரஸ் கட்சியாக அறிவிக்க வேண்டும்” என்று மேலும் கூறினார்.
திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, ”இந்தக் கருத்துகள், கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளன. இதற்கு முதல்வர் ரேவந்த ரெட்டி மன்னிப்புக் கேட்க வேண்டும். நீண்டகால மரபுகளை விமர்சிப்பதை ஏற்க முடியாது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.