நாடாளுமன்றத்தில் ஒலித்த எம்.பி.க்களின் குரல்கள்...

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச்சேர்ந்த அவற்றின் உறுப்பினர்கள் புதன்கிழமை எழுப்பிய மற்றும் பேசிய முக்கிய விஷயங்களின் சுருக்கம் வருமாறு:
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்
Updated on
2 min read

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தைச்சேர்ந்த அவற்றின் உறுப்பினர்கள் புதன்கிழமை எழுப்பிய மற்றும் பேசிய முக்கிய விஷயங்களின் சுருக்கம் வருமாறு:

மக்களவையில்...

மாலியில் சிக்கிய தென்காசி தொழிலாளர்களை காப்பாற்றுங்கள்!

- கனிமொழி, நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர், தூத்துக்குடி.

தூத்துக்குடி மற்றும் தென்காசியைச் சேர்ந்த ஐந்து இந்திய குடிமக்கள், மாலியில் உள்ள மின்சார நிறுவனத்தில் ஆறு மாதங்களாக பணியாற்றி வந்தனர். கடந்த நவம்பர் 6-ஆம் தேதி அவர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

அவர்களின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என அவர்களின் குடும்பத்தினர் அறியவில்லை. அவர்களை மத்திய அரசு காப்பாற்றி மீட்டு தாயகத்துக்கு அழைத்து வர வேண்டும்.

மத்திய வரிகளில் மாநில பங்கை 50% ஆக்குங்கள்!

- தமிழச்சி தங்கப்பாண்டியன், திமுக, தென் சென்னை

மத்திய அரசின் கருவூலத்துக்கு அதிக நிதியை தமிழகம் வழங்குகிறது. ஆனால் வரிப்பகிர்வில், தமிழகத்துக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை. 30-6-2022 அன்று சரக்கு, சேவை வரி இழப்பீடு முடிவுக்கு வந்ததால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

15-ஆவது நிதி ஆணையம் மாநிலங்களுக்கு 41 சதவீத பங்கை பரிந்துரைத்தாலும், கடந்த 4 ஆண்டுகளில் நடைமுறையில் உள்ள பகிர்வு சுமார் 33.16 சதவீதம் மட்டுமே. 16-ஆவது நிதி ஆணைய காலத்திலேயே மத்திய வரிகளில் மாநிலங்களின் பங்கை 50 சதவீதமாக்க வேண்டும்.

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்குங்கள்

- தங்கத்தமிழ்செல்வன், திமுக, தேனி

மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், 19 வயதிலேயே விடுதலை இயக்கத்தில் பங்கேற்று 4000 நாள்களை சிறையில் கழித்தவர். தீண்டாமை ஒழிப்பை ஊக்குவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பட்டியலின மக்களை நுழையச் செய்து வரலாற்றுபூர்வ புரட்சியை ஏற்படுத்தினார்.

விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள், சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்காக முழு வாழ்வையும் அர்ப்பணித்தார். கட்சி வேறுபாடின்றி அவருக்கு பாரத ரத்னா வழங்க தமிழக கட்சிகள் வலியுறுத்துகின்றன. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

ஓய்வூதிய புதிய விதிமுறையை தெளிவுபடுத்துங்கள்

- டி. மலையரசன், திமுக, கள்ளக்குறிச்சி

மத்திய அரசு கடந்த மார்ச் 29-ஆம் தேதி வெளியிட்ட ஓய்வூதிய புதிய முறை-2025 அறிவிக்கையின்படி புதிய விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. ஓய்வூதியம் என்பது கருணை சலுகை அல்ல. புதிய விதிகள் குறித்து சம்பந்தப்பட்ட சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தப்படவில்லை.

ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. புதிய விதிகளின் நோக்கம், பின்புலத்தை மத்திய அரசு விளக்க வேண்டும். புதிய விதிகளால் ஓய்வூதியதாரர்கள் எவ்வித சலுகையையும் இழக்க மாட்டார்கள் என உறுதியளிக்க வேண்டும்.

நெல் கொள்முதல் ஈரப்பத சதவீதத்தை தளர்த்துங்கள்!

-டி.எம்.செல்வகணபதி, திமுக, சேலம்

தமிழ்நாட்டில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான அனுமதிக்கப்பட்ட ஈரப்பத அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக அதிகரிக்க தமிழக முதல்வர் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து மத்திய குழுவினர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து நெல் மாதிரிகளை சேகரித்துச்சென்ற பின்னரும் ஈரப்பத அளவை தளர்த்தவில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை தளர்த்த வேண்டும்.

மாநிலங்களவையில்...

ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என்றே அழைக்கவும்!

-திருச்சி சிவா, திமுக

தமிழகத்தில் உடல் ஊனமுற்றோரை மாற்றுத்திறனாளிகள் என அழைக்க கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடவடிக்கை எடுத்தார். ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் ஒரு உறுப்பினர் மாற்றுத்திறனாளியாக இருப்பதை உறுதிப்படுத்தும் சட்டத்திருத்தத்தை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தினார்.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளைக் குறிக்க திவ்யாங்ஜன் என அரசுத்துறையின் பெயர் மாற்றப்பட்டது. ஆனால், ஐ.நா குழு அவர்களை குறிப்பிடுவது மோசமானதாக உள்ளது. எனவே, அவர்களை மாற்றுத்திறனாளிகள் என்றே அழைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமக்ர சிக்ஷா நிதியை உடனே விடுவிக்கவும்!

-ஆர். கிரிராஜன், திமுக

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு மத்திய அரசு எவ்வித நிதியையும் தொடர்ந்து விடுவிக்காமல் உள்ளது. இந்த நிதியை மத்திய அரசு விரைவாக விடுவிக்குமா? நிலுவை நிதி ரூ.2,151 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிப்பதற்கான உத்தரவாதத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.

(இதற்கு அவையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளிக்கையில், "தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நிதி வழங்க பிரதமர் முழு ஈடுபாட்டுடன் உள்ளார். ஆனால், மத்திய திட்டங்களை முதலில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். நிபந்தனை விதிக்கக்கூடாது' என்றார்.)

கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும்

-கனிமொழி என்விஎன் சோமு, திமுக

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துள்ளது. இது லட்சக்கணக்கான மக்களின் விருப்பங்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலாகும். பாதுகாப்பான, நவீன மற்றும் நிலையான போக்குவரத்தை மக்கள் அணுகுவதைத் தடுக்கிறது. குறைவான மக்கள்தொகை கொண்ட பிற இரண்டாம் நிலை நகரங்கள் கூட மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுள்ளன. ஆனால், தமிழ்நாடு மட்டும் வித்தியாசமாக நடத்தப்படுவது ஏன்? இத்திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com