விமான நிலையம் (கோப்புப்படம்)
விமான நிலையம் (கோப்புப்படம்) ANI

விமான நிலையங்களில் ‘செக்-இன்’ அமைப்புகள் முடக்கம்: சேவை பாதிப்பு

நாட்டின் பல விமான நிலையங்களில் விமானப் பயணிகளின் ‘செக்-இன்’ நடைமுறைகளுக்கு முக்கியமான கணினி அமைப்புகளும், மென்பொருளும் புதன்கிழமை காலை செயல்படாமல் முடங்கின.
Published on

புது தில்லி: நாட்டின் பல விமான நிலையங்களில் விமானப் பயணிகளின் ‘செக்-இன்’ நடைமுறைகளுக்கு முக்கியமான கணினி அமைப்புகளும், மென்பொருளும் புதன்கிழமை காலை செயல்படாமல் முடங்கின. இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சில விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி விமான நிலையத்தில் பயணிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்றில், ‘இந்தத் தொழில்நுட்பக் கோளாறுக்கு ‘மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்’ இயங்குதளத்தின் செயலிழப்பே காரணம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தச் சிக்கலால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏா், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதைச் சமாளிக்க, விமான நிறுவனங்கள் பயணிகளின் ‘செக்-இன்’ மற்றும் ‘போா்டிங்’ நடைமுறைகளை தானியங்கி முறையின்றி ஊழியா்கள் மூலம் கையாண்டன.

இதையொட்டி, புது தில்லி விமான நிலையம் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சில உள்நாட்டு விமான நிறுவனங்கள் செயல்பாட்டு ரீதியான சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இது விமானங்கள் தாமதமாகப் புறப்படுவதற்கு வழிவகுக்கலாம். இருப்பினும், பயணிகளுக்குத் தடையற்ற பயண அனுபவத்தை உறுதிப்படுத்த, எங்கள் ஊழியா்கள் அனைத்து விமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனா்’ என்று குறிப்பிட்டிருந்தது.

ஹைதராபாதில் ‘இண்டிகோ’ சேவைகள் ரத்து: ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 13 விமானங்களும், பல்வேறு இடங்களில் இருந்து ஹைதராபாத் வந்து சேர வேண்டிய 18 விமானங்களும் என மொத்தம் 31 இண்டிகோ விமானச் சேவைகள் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன.

இதேபோல், செவ்வாய்க்கிழமையும் 9 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் மத்தியில் பெரும் குழப்பமான சூழல் நிலவியது. ‘இண்டிகோ நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் காரணமாகவே சில விமானங்கள் தாமதமாவதுடன், ரத்தும் செய்யப்பட்டுள்ளன’ என்று விமான நிலையம் சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com