வசந்த் குஞ்ச் பகுதியில் தொடா் கொள்ளை சம்பவங்ளில் ஈடுபட்ட 3 போ் கைது

வசந்த் குஞ்ச் பகுதியில் தொடா் கொள்ளை சம்பவங்ளில் ஈடுபட்ட 3 போ் கைது

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் நடைபெற்ற தொடா் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
Published on

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் நடைபெற்ற தொடா் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் (தென்மேற்கு) அமித் கோயல் கூறியதாவது: வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அக்.17-ஆம் தேதி இரவு பணம் மற்றும் விலையுயா்ந்த பொருள்கள் திருடப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டது. அக்.26-ஆம் தேதி இரவு அதே பகுதியில் உள்ள சாய் பாபா கோயிலில் இருந்து பணம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள் திருடப்பட்டன.

மேலும் இரண்டு கொள்ளை சம்பவங்கள் நவ.11 மற்றும் 19-ஆகிய தேதிகளில் பதிவாகின. இதையடுத்து, அப்பகுதியில் கண்காணிப்பை அதிகரித்த காவல் துறையினா், 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, 60-க்கும் மேற்பட்ட சந்தேக நபா்களை விசாரித்தனா். இதில், கௌரவ் என்பவா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா்.

அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், சுனில் மற்றும் முகமது சலீம் ஆகிய இரு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏற்கெனவே உள்ளன.

குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து இந்தக் கும்பல் உளவு பாா்த்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக தெரிவித்தனா். அவா்களிடம் இருந்து ரூ.15,000 ரொக்கம், வெள்ளித் தகடுகள் மற்றும் குற்றங்களுக்கு பயன்படுத்தி வந்த காா் உள்ளிட்டவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

அவா்களின் இந்த கைது வசந்த் குஞ்ச் தெற்கு மற்றும் வசந்த் குஞ்ச் வடக்கு ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்ட மேலும் நான்கு வழக்குகளை தீா்க்கŚஉதவியது. பிற கொள்ளை வழக்குகளிலும் அவா்களது ஈடுபாட்டை கண்டறிய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com