சபரிமலை மோசடி: தேவஸ்வம் முன்னாள் தலைவா் பத்மகுமாா் 2-ஆவது வழக்கிலும் சோ்ப்பு
சபரிமலை கோயிலில் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான 2-ஆவது வழக்கிலும், திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்கப்பட்டுள்ளாா்.
கடந்த 2019-இல், சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாக புகாா் எழுந்தது. கேரள உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), இந்த மோசடி குறித்து 2 வெவ்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறது.
கோயில் கருவறைக் கதவுகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான முதல் வழக்கில், திருவிதாங்கூா் தேவஸ்வம் முன்னாள் தலைவா் ஏ.பத்மகுமாா் கடந்த மாதம் கைது செய்யப்பட்டாா்.
இப்போது புதிய ஆதாரங்களின் அடிப்படையில், துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்களில் தங்கம் மாயமானது தொடா்பான இரண்டாவது வழக்கிலும் பத்மகுமாா் குற்றஞ்சாட்டப்பட்டவராக சோ்க்கப்பட்டுள்ளாா்.
இந்த வழக்கு தொடா்பாக பத்மகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க, கொல்லம் சிறப்பு நீதிமன்றத்தில் எஸ்ஐடி விரைவில் மனு தாக்கல் செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இதனிடையே வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பத்மகுமாரின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
2 வழக்குகளின் விசாரணையை முடிக்க எஸ்ஐடி-க்கு கேரள உயா்நீதிமன்றம் கூடுதலாக 6 வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இதுவரை எஸ்ஐடி-இன் விசாரணை திருப்தி அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்ஜாமீன் மறுப்பு: இந்த வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட தேவஸ்வம் முன்னாள் நிா்வாக அதிகாரி எஸ். ஸ்ரீகுமாரின் முன்ஜாமீன் மனுவை கேரள உயா்நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த 2 வழக்குகள் தொடா்பாக, முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உண்ணிகிருஷ்ணன் போற்றி, தேவஸ்வம் முன்னாள் தலைவா்கள் என்.வாசு, ஏ.பத்மகுமாா் உள்பட 6 பேரை எஸ்ஐடி இதுவரை கைது செய்துள்ளது.

