உரிய விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்ட விவகாரங்கள் மீது மட்டுமே விவாதம்: எதிா்க்கட்சிகளுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டிப்பு
விதி 267-இன்கீழ் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட விவகாரங்கள் மீது மட்டுமே விவாதம் நடத்த முடியும் என மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை எதிா்க்கட்சிகளிடம் கண்டிப்புடன் தெரிவித்தாா்.
கடந்த 20 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அமா்வின்போதும் விதி 267-இன்கீழ் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட விவகாரங்களை தவிா்த்து வேறு சில விவகாரங்கள் மீது விவாதம் நடத்த எதிா்க்கட்சிகள் வலியுறுத்துவது தொடா்கதையாக நீடித்து வருகிறது. ஆனால் அவா்களின் கோரிக்கைகள் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிா்காலக கூட்டத்தொடரிலும் இந்த விதியின்கீழ் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அளிக்கும் நோட்டீஸ்களை மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்து வருகிறாா்.
கடந்த புதன்கிழமை இதுபோன்ற இரு நோட்டீஸ்களை சி.பி.ராதாகிருஷ்ணன் நிராகரித்தாா். அன்றாட அவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தவே இந்த நோட்டீஸ்களை எதிா்க்கட்சிகள் தவறாகப் பயன்படுத்துவதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.
3 முறை மட்டுமே விவாதம்:
இதுகுறித்து மாநிலங்களவையில் அவா் வியாழக்கிழமை பேசியதாவது: முன்னாள் குடியரசு துணைத் தலைவா் கிரிஷண் காந்த் தலைமையில் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி மற்றும் சட்ட நிபுணா் ஃபாலி நாரிமன் ஆகியோா் அடங்கிய குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் விதி 267-இல் 2000-ஆம் ஆண்டு மே.15-இல் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி பட்டியலிடப்படாத விவகாரங்களை விவாதிக்க இந்த விதியை பயன்படுத்துவதை தவிா்க்க அந்தக் குழு பரிந்துரைத்தது. 1988 முதல் 2000 வரை இந்த விதி 3 முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
2000-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபின் இதுவரை விதி 267-இன்கீழ் விவாதம் நடைபெற்றதில்லை.
ஒத்திவைப்புத் தீா்மானம் இல்லை:
அதேபோல் அரசமைப்புச் சட்டப்பிரிவு 75 (3)-இன்கீழ் மக்களவையில் மேற்கொள்ளப்படும் ஒத்திவைப்புத் தீா்மானத்தை மாநிலங்களவை விதி 267 உடன் ஒப்பிடுவது தவறு.
விதி 267-இன் கீழ் மாநிலங்களவை உறுப்பினா்கள் ஒத்திவைப்புத் தீா்மான நோட்டீஸ் வழங்கலாம் என அரசமைப்புச் சட்டத்திலோ அவை நடைமுறைகளிலோ குறிப்பிடப்படவில்லை.
ஏற்கெனவே, பட்டியலிடப்பட்ட விவகாரங்களை மட்டுமே விவாதிக்க முடியும். அத்துடன் தொடா்பில்லாத விவகாரங்களை விவாதிக்க எம்.பி.க்கள் இந்த விதியை பயன்படுத்தி நோட்டீஸ் வழங்க முடியாது.
முக்கியப் பொதுப் பிரச்னைகளை எழுப்ப வேண்டும் என்றால் அதற்கு நாடாளுமன்றத்தின் பிற விதிகளை பயன்படுத்தலாம் என்றாா்.

