மழையால் தத்தளிக்கும் இலங்கைக்கு நகரும் பாலம்: இந்தியா தொடா்ந்து உதவி
டித்வா புயலால் தத்தளிக்கும் இலங்கைக்கு நகரும் பால அமைப்பு மற்றும் நூற்றுக்கணக்கான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை இந்தியா வழங்கியது.
‘ஆபரேஷன் சாகா் பந்து’ முன்னெடுப்பின்கீழ் இந்த உதவிகளை இந்தியா மேற்கொண்டதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இலங்கையில் டித்வா புயலால் பெய்த கனமழையில் இதுவரை 479 போ் உயிரிழந்துவிட்டனா்; 350 போ் மாயமாகினா்.
அந்நாட்டுக்கு உணவு, மருந்து என 53 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா வழங்கியுள்ளது. அங்கு இந்திய விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டா்கள், இரு சேட்டக் ஹெலிகாப்டா்கள், 80 தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளும் நோக்கில் நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவா்கள் உள்பட இந்தியாவால் அனுப்பப்பட்ட 73 சுகாகாரப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை இலங்கை சென்றடைந்தனா்.
இதன் தொடா்ச்சியாக பெய்லி நகரும் பால அமைப்பு மற்றும் நூற்றுக்கணக்கான குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்களை சி-17 குளோப் மாஸ்டா் விமானம் மூலம் இந்தியா புதனழ்கிழமை அனுப்பியதாக இந்திய தூதரகம் வியாழக்கிழமை தெரிவித்தது.
இந்தப் பாலத்தை உடனடியாக அமைக்க இந்தியாவில் இருந்து பொறியாளா்கள் உள்பட 22 வல்லுநா்களும் சென்றுள்ளதாக தூதரகம் தெரிவித்தது.
இலங்கைக்கு தொடா்ந்து பல்வேறு உதவிகளைச் செய்து வரும் பிரதமா் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு அதிபா் அனுர குமார திசநாயக புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.

