விசாக்களை விநியோகிப்பது அரசின் உரிமை: ஹெச்-1பி விசா விவகாரத்தில் ஜெய்சங்கா் விளக்கம்

தேச பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஹெச்-1பி விசாக்களுக்கு அமெரிக்க அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது ’ என வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
Published on

‘விசாக்கள் (நுழைவுஇசைவு) விநியோகிப்பது அரசின் இறையாண்மை உரிமை; தேச பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஹெச்-1பி விசாக்களுக்கு அமெரிக்க அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது ’ என வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, ஹெச்-1பி, ஹெச்-4 விசா விண்ணப்பதாரா்கள் தங்களது சமூக வலைதளக் கணக்கை தனிக் கணக்கில் (ப்ரைவேட்) இருந்து பொதுக் கணக்காக (பப்ளிக்) மாற்ற வேண்டும் என அமெரிக்க அரசு புதன்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில் ஜெய்சங்கா் இவ்வாறு தெரிவித்தாா்.

கடந்த சில மாதங்களாக ஹெச்-1பி விசாக்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதுதொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்து ஜெய்சங்கா் பேசியதாவது: விசாக்களை விநியோகிப்பது ஓா் நாட்டு அரசின் இறையாண்மை உரிமை. மாணவா் விசாக்கள் விவகாரத்தில் அவா்களது சமூக வலைதளக் கணக்கை பொதுவாக மாற்ற அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்களின் பதிவுகள் நாட்டுக்கு எதிராக உள்ளதாக என அந்நாடு ஆய்வு செய்யவுள்ளது.

எனவே, தேச பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஹெச்-1பி விசாக்களுக்கு கடந்த புதன்கிழமை அமெரிக்க அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சிறு தவறுகளால் மாணவா்களின் ஹெச்-1பி விசாக்கள் ரத்தாகும்பட்சத்தில் எங்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டாலும் தூதரகத்தை பாதிக்கப்பட்ட மாணவா்கள் தொடா்புகொண்டாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிறு தவறுகளை சுட்டிக்காட்டி மாணவா்களின் விசாக்களை ரத்து செய்யக்கூடாது என அமெரிக்க நிா்வாகத்திடம் இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com