

ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட்டால், இந்திய வளர்ச்சியின் திருப்புமுனையாக அமையும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மொத்தம் 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இதுதொடர்பாக பல கட்டங்களாக ஆய்வு நடத்திய ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு, ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஆதரித்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் கடந்தாண்டு அறிக்கை தாக்கல் செய்தது.
இதனைத் தொடர்ந்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் வகையில், நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு 2 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. விவாதத்துக்குப் பிறகு நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் செய்தியாளர்களுடன் ராம்நாத் கோவிந்த் இன்று பேசியதாவது:
”ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் உயர்நிலைக் குழு சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் இரண்டு மசோதாக்கள் தயாரிக்கப்பட்டு, 2024 ஆம் ஆண்டு மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
தற்போது இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளன. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டால், அது இந்தியாவின் வளர்ச்சிக்கு திருப்புமுனையாக அமையும்.
தற்போதைய முறைப்படி, ஒவ்வொரு ஆண்டும் 4, 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக முழு அரசு நிர்வாக இயந்திரமும் செயல்படுகின்றன. தேர்தல் செயல்பாட்டால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாவது கல்வித் துறைதான். தேர்தல் ஊழியர்கள் பெரும்பாலானோர் ஆசிரியர்கள்தான்.” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.