

வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், இன்று இந்தியாவுக்கு வருகைதரும் நிலையில், அவரைச் சந்திக்க மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ராகுலின் குற்றச்சாட்டு அரசு பதிலளிக்க வேண்டும். ஜனநாயக நாட்டில் வருகைதரும் தலைவர்கள் அனைத்துத் தரப்பினரையும் சுதந்திரமாக சந்திக்க வேண்டும்.
ரஷிய அதிபருடன் விவாதிப்பதற்கு நிறைய உள்ளது. பிரதமரும் புதினும் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்துவார்கள் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.
மேலும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்க எதிர்க்கட்சிக்கு அனுமதி மறுக்கப்படுவதாக ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஆதரவு தெரிவித்த வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி, இது மிகவும் விசித்திரமானது. இந்தியாவுக்கு வருகைதரும் அனைத்து பிரமுகர்களும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திப்பது ஒரு நெறிமுறை. அரசால் இந்த நெறிமுறை மாற்றப்பட்டு வருகிறது.
யாரும் குரலை உயர்த்துவதை அவர்கள் (மத்திய அரசு) விரும்பவில்லை. அதுதான் அவர்களின் கொள்கை. மற்றவர்களின் கருத்தைக் கேட்கவும் அவர்கள் விரும்பவில்லை.
அவர்கள் எதைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்பது கடவுளுக்குத் தெரியும். ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்களின் கருத்தைக் கூற அனுமதியுண்டு, விவாதங்கள் நடத்தப்பட வேண்டும், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இந்த நெறிமுறையை உடைத்து மாற்றுவதால் அவர்களுக்கு என்ன பயன்? ஜனநாயகத்தின் பிம்பம் களங்கப்படுத்தப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.
வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய ராகுல், ``பொதுவாக இந்தியாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் யார் வருகை தந்தாலும், அவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு நடத்துவது வழக்கம். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சியிலும் இந்த வழக்கம் இருந்தது. ஆனால், தற்போது அப்படியில்லை.
வெளிநாட்டுத் தலைவர்கள் யாரேனும் இந்தியாவுக்கு வருகைதந்தாலும் அல்லது நான் வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் சந்திக்கக் கூடாது என்று அவர்கள் (மத்திய அரசு) அறிவுறுத்துவதாகக் கூறப்படுகிறது.
நாங்களும் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். ஆனால், எங்களை வெளிநாட்டுத் தலைவர்கள் சந்திப்பதை அரசு விரும்பவில்லை. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை எதிர்க்கட்சிகளிடமிருந்து பிரதமரும் வெளியுறவு அமைச்சகமும் விலக்கியே வைத்திருக்கிறது. அவர்களின் பாதுகாப்பின்மையால் இவ்வாறு செய்கின்றனர்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சாலை வலத்துக்கு அனுமதி மறுப்பு: புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்த தவெக முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.