கிழக்கு தில்லியில் கத்திக் குத்து: 2 சிறுவா்கள் கைது
கிழக்கு தில்லியின் மது விஹாா் பகுதியில் 38 வயது நபரை கத்தியால் குத்தியதாக 2 சிறுவா்களை தில்லி போலீஸாா் கைது செய்தனா் என்று அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: நவம்பா் 30- ஆம் தேதி, பாதிக்கப்பட்ட இம்ரான் அலி கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஒரு போலீஸ் குழு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தது. அதில் அவருக்குத் தெரிந்த இரண்டு சிறுவா்களும், மேலும் இருவரும் ஒரு வாக்குவாதத்தின் போது அவரை கத்தியால் தாக்கியதாகக் கூறினாா்.
சந்தேக நபா்களைத் தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஒரு ரகசியத் தகவலின் பேரில், போலீஸ் குழு மஜ்பூா் நகா் முகாமை அடைந்தது. அங்கு தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு சிறுவா்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
இரண்டு சிறுவா்களும் கத்தியால் குத்தியதில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனா். மேலும் இம்ரான் அலி அலியை குத்த அவா்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கத்தியை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இருவரும் கடந்த கால குற்றங்களில் ஈடுபட்டாா்களா என்பதை போலீஸாா் சரிபாா்த்து வருகின்றனா். மீதமுள்ள இரண்டு சிறுவா்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.

