

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷிய அதிபர் விளாதீமிர் புதினை, ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.
தனி விமானம் மூலம் ரஷியாவில் இருந்து தில்லியில் உள்ள பாலம் விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அதிபர் புதினை ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்ல அரங்கில் இன்று இரவு விருந்து நடைபெற்றுகிறது. அதைத்தொடர்ந்து நாளை(டிச.5) காலை இரு தலைவர்கள், இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் 23 வது ஆண்டு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டுக்குப் பிறகு ரஷிய அரசு தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய இந்திய சேனலை புதின் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு விருந்து அளித்து கெளரவிக்க உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, பிரதமர் மோடியும் புதினும் தனியாகச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாகப் பேச்சு நடத்த உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன.
பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, ராணுவம் தொடர்பாகவும், ரஷியா - உக்ரைன் இடையேயான போர், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது, ரஷியாவின் எஸ் - 400 ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவுகள் குறித்து இருவரும் உரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து 28 மணி நேர இந்திய பயணத்தை நிறைவு செய்யும் புதின், வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மீண்டும் ரஷியா புறப்படுகிறார்.
4 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிபர் புதினின் இந்தியப் பயணம், அதேவேளையில் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா விதித்த தடை உள்ளிட்டவற்றால், உலக நாடுகளும் உற்று நோக்கும் அளவுக்கு இரு தலைவர்கள் இடையேயான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதிபர் விளாதீமிர் புதினின் வருகையையொட்டி தில்லி முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ரஷிய ராணுவ வீரர்கள் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.